தொழில்நுட்பம் உயிர் காக்கும்
சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.
கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.
சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.
இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.