‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு

தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
தமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவர் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
காவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ்.
இதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது.
இப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.
 |
 |
காவிரி விவசாயிகள் |
இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.
ஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள்
 |
 |
காவிரி |
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96
1992-93 ….. 351.69
1993-94 ….. 223.37
1994-95 ….. 373.16
1995-96 ….. 183.09
1996-97 ….. 244.05
1997-98 ….. 268.05
1998-99 ….. 237.27
1999-2000.. 268.60
2000-01 ….. 306.20
2001-02 ….. 162.74
2002-03 ….. 94.87
2003-04 ….. 65.16
2004-05 ….. 163.96
2005-06 ….. 399.22
2006-07 ….. 227.76
(பிப்.2 வரை)
இவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது.
ஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து.
காவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது.
மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.
மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.
காவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை
பா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.
இப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார்.
17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது.
கி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன.
காவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது.
ஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது.
கிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது.
“கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது.
1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது.
இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.
44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது.
அதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
சென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம்.
எதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
பிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.
நடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது.
விவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது.
16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
நடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது.
தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.
ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை.
ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.
1974-க்குப் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின.
உபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமா?ஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
உபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது.
ஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை.
உபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?
அண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது.
திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை.
தொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.
பஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.
எல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு
Dinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.
ஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும்.
அணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகம், கேரளம் அல்லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
கிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள்.
தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம்.
இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.
இந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான்.

காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை
திருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது:
“காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான்.
காவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
கோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Dinamani – Feb 14, 2007
காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும்
பழ. நெடுமாறன்
சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம்.
1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே.
ஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும்.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும்.
கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும்.
காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது.
இந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம்.
இந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும்.
இதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை.
பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.
காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது.
1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன.
உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.
இறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை.
(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).