“ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, பிப். 8: கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது தொடர்பான வழக்கில் ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபர் விஜய் சேகர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
மேலும் லஞ்சம் கொடுத்து யார் மீது வேண்டுமானால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்பது தொடர்பான ஒரு ஜோடிக்கப்பட்ட செய்தியை கடந்த 2004-ல் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. “உங்கள் மீது ஏன் விசாரணை நடத்தக்கூடாது. இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸýக்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும்’ என்று ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.