Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Public Works Department’ Category

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »

Chennai Book Fair – M Karunanidhi to open the Madras Festival in St. George Anglo Indian HSS

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

5 கோடி புத்தகங்கள் இடம்பெறும் கண்காட்சி: சென்னையில் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்

30th Book Exhibition – Chennai Book Fair : Idly Vadai
IdlyVadai – இட்லிவடை: 30வது புத்தக கண்காட்சி

30th Chennai Book Fair – Badri : First Day Announcements & Karunanidhi Visit
பத்ரியின் வலைப்பதிவுகள்

Official Website

வலைத்தள: http://www.bapasi.org/

வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 – பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – தமிழில்

செய்திகள்:
More space, more books, some films: fair from today – The Hindu
Chennai Book Fair has new venue – The Hindu
Chief Minister’s largesse to book publishing industry – The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி

சென்னை,ஜன.9-

தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 30-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் துரை முருகன், நல்லி குப்புசாமி உள்படபலர் கலந்து கொள்கிறார்கள்.

கண்காட்சியில் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் சர்வ தேச அளவிளான அனைத்து தரப்பு புத்தகங்களும் கிடைக்கும். தினமும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தினமும் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கண்காட்சியில் நடைபெற உள்ளது. புத்தகங்கள் வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடி உண்டு.

சிறந்த எழுத்தாளருக்கான மணிவாசகம் பதிப்பகம் ச.மெய்யப்பன் விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும்,

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகசெம்மல் க.கணபதி விருது பிரேமா பிரசுரத்திற்கும் வழங்கப்படுகிறது.

குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது ஹரிஹரன் என்ற ரேவதிக்கும்,

சிறந்த புத்தக விற்பனையாளர் விருது திருச்சி அகத்தியர் புத்தக சாலைக்கும் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சி நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். 12-வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.

கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. அதற்கு கட்டணமும் உண்டு. மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சி 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தகவலை தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேட்டியின் போது தெரிவித்தார். அருகில் செயலாளர் சண்முகம் இருந்தார்.

சொந்தப் பணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன. 11: தனது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடி நிதியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு (பபாசி) வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை மாலை அவர் தொடங்கி வைத்தார்.

“பபாசி’ தேர்வு செய்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன், குழந்தை எழுத்தாளர் ஹரிஹரன் என்கிற ரேவதி, சிறந்த பதிப்பகத்தாரான பிரேமா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளர் திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியது:

சிறந்த எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் சால்வை உள்ளிட்டவற்றை வழங்குமாறு சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறினார்.

இதைத் தொடர்ந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொற்கிழி வழங்கச் சொல்வார் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் காந்தி கண்ணதாசன் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.

இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக் கூடாது என்று கருதி, இச்சங்கத்துக்கு ரூ. 1 கோடி தொகையை எனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குகிறேன்.

ரொக்கத் தொகையை வங்கியில் நிரந்தரக் கணக்கில் போடுவதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் என ஆண்டுதோறும் 5 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதற்கு இத்தொகை பயன்படட்டும்.

ஏற்கெனவே சன் டி.வி. நிறுவனம் மூலம் எனது மனைவியின் பங்குத் தொகையாக கிடைத்த பணம் வங்கியில் போடப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஏழை எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி போன்றவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து,

  • திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையத்தை சார்ந்த எஸ். கோபாலகிருஷ்ணன் (சிறந்த புத்தக விற்பனையாளர்),
  • பிரேமா பிரசுரத்தை சார்ந்த ஆர்.எம்.ரவி (சிறந்த பதிப்பகத்தார்),
  • ஹரிஹரன் என்கிற ரேவதி (சிறந்த குழந்தை எழுத்தாளர்),
  • எழுத்தாளர் பிரபஞ்சன் (சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்
  • முதலமைச்சர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
  • தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
  • சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன்.

சென்னை, ஜன. 11: புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கூறினால் அதை அளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 30-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகிலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலும் இடம் இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் பணியைத்தான் எனக்கு விட்டு வைத்திருக்கிறார்.

சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டு இதில் எது வசதியான இடம் என்று முடிவு செய்து கூறினால், அதை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

இதற்கான கட்டடத்தை அரசு கட்டுவதா அல்லது பதிப்பகத்தாரே கட்டிக் கொள்வதா என்று அடுத்த கட்டமாக பேசப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டாக கட்டுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

மாலை, சால்வைக்குப் பதில் புத்தகம்: அரசு விழாக்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதில் புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டது. அரசு விழாக்களில் இது நிச்சயம் பின்பற்றப்படும் என்றார் கருணாநிதி.

முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திரளான புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.

Posted in 30th Book Fair, Agathiyar Book Depot, Authors, Azha Valliappa Prize, BAPASI, Best Publisher, Book Fair, Book Updates, Books, Booksellers, Chetput, Durai Murugan, Ethiraj College, Function Pictures, Gandhi Kannadasan, Hariharan, Ka Ganapathy Award, Kizhakku Pathippagam, M Karunanidhi, Madras, Manivaasagam Pathippagam, Nalli Kuppusamy, Official News, Pachaiappa College, Pachaiappaa College, Pachaiyappa College, Permanent Exhibition, Permanent Place, Photos, Prabanjan, Prema Prasuram, Prizes, Public Works Department, Publishers, PWD, Revathy, RM Ravi, S Gopalakrishnan, Sa Meyyappan Award, Saidapet, School Grounds, Shares, St. George Anglo Indian HSS, St. George Anglo-Indian Higher Secondary, Sun Network, Sun TV, Tamil, Thadandar Nagar, Thamizh, Virudhugal, Viruthu, Writers, XXX Book Exhibition | Leave a Comment »