60 லட்சம் மனநோயாளிகள்!
நெல்லை சு. முத்து
இந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.
உலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.
அப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.
இந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
நமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது?
ஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.
இதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.
லட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.
இதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.
நம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.
தீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.
சாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே! அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா? அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா? அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே!
பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.
உள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.
ஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.
போர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒருவிதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.
இது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.
இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.
ஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.
மொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.
அதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.
நாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.
வளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் காட்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ?
(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).