போப்பாண்டவருக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கண்டனம்
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள், “இஸ்லாம்”பற்றி தெரிவித்த கருத்துக்கள் பற்றி அதிகரித்து வரும் கண்டனங்களோடு, பாகிஸ்தான் நாடாளுமன்றமும் இபோது இணைந்திருக்கிறது.
ஜெர்மனியில் போப்பாண்டவர் இவ்வாரம் பிரசங்கம் நிகழ்த்தும் போது, ஆதாரம், நம்பிக்கை, வன்முறை இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்ததோடு, பதினான்காம் நூற்றாண்டின் கிறிஸ்துவ சக்ரவர்த்தி ஒருவரை மேற்கோள்காட்டி, நபிகள் நாயகம் கொண்டு வந்த ஒரே ஒரு புதிய கோட்பாடு, “இஸ்லாமிய மதம் கத்தியினால் பரப்பப்பட வேண்டும்” என்ற கட்டளை தான் என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டளை நியாயபூர்வமான விளக்கங்களுக்கு முரணானது, ஆண்டவனின் தன்மைக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
பாப்பரசருக்கு எதிரான காஷ்மீர் ஆர்ப்பாட்டம் |
பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானத்தில், பாப்பரசரின் கருத்துக்கள் இஸ்லாமியத்தை சிறுமைப்படுத்துகின்றன என்றும், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி வாட்டிகனில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,
இஸ்லாமிய மதத்தவரின் மனதைப் புண்படுத்துவது பாப்பரசரின் நோக்கம் அல்ல, ஆனால் மதத்தினால் தூண்டப்பட்ட வன்செயல்களை தாம் நிராகரிக்கிறார் என்பதைத்தான் பாப்பரசர் தெளிவுப்படுத்த விரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் இந்த விவகாரம் குறித்த, தமிழ்நாடு ஆயர்கள் சங்கத்தின் சார்பில் பேசவல்ல வின்சண்ட் சின்னத்துரை அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.