வண்ண தொலைக்காட்சிப் பெட்டி: நாமக்கல் முதலிடம்
30 ஆகஸ்ட் 2007
15:16 IST
தமிழக அரசின் ஏழை மக்களுக்கான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதில், மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தர மூர்த்தி கூறியிருக்கிறார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரத்தசேமிப்பு வங்கி அறை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 55 லட்சமும், ராசிபுரம் மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு ரூ. ஒரு கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் ஆயிரத்து 333 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் வெள்ளியன்று பங்கேற்கும் விழாவில், ஆயிரத்து 174 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது என்றார்.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பொறுத்தவரை 54 ஆயிரத்து 955 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
—————————————————————————————————————————————————–
தேவை மறுபரிசீலனை
அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பயனாளிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அரசு தரும் ஒரு பயனுறு பொருளை ஒருவர் ஏன் குறைந்த விலைக்கு விற்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? இலவச தொலைக்காட்சி பெற்றவர்களிடம் ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது என்பதும், மிகச் சில வீடுகளில் வறுமையாலும் பணநெருக்கடியாலும் விற்கிறார்கள் என்பதுமே காரணமாக இருக்க முடியும்.
இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச நிலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி அவர்கள் பெறப்போகும் பொருள் அவர்களிடம் இருக்கக்கூடாது என்பதும், அவரிடம் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்பதும்தான். குடும்பத்தின் ஆண்டு வருமானம் கவனம் பெறுவதில்லை.
பயனாளிகள் தேர்வு என்பது அந்தந்த பஞ்சாயத்து அளவில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பரிந்துரைக்கும் பெயர் பட்டியல்தான் பயனாளிகள் என்பது அனைவரும் அறிந்தவொன்று.
பயனாளியிடம் ஏற்கெனவே டிவி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை, 90 சதவிகிதம், சரியாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் குடும்பத்துக்கே மீண்டும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கிறபோது அதை பயன்பாடின்றி வீட்டில் வைத்திருப்பதைவிட, குறைந்த விலைக்கு விற்று விடுவதையே விரும்புகின்றனர்.
உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பயனாளிகளில் பெரும்பாலோர் நிச்சயமாக மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருப்பதில்லை. அன்றாடத் தொழிலாளர்களான இவர்களுக்கு கேபிள் டிவி கட்டணம் என்பது நாள்கூலியைவிட அதிகமானது. ஆகவே டிவியை விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இதே நிலைதான் இலவச எரிவாயு இணைப்பிலும்! இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் அன்றாடத் தொழிலாளிகள். அன்றைய பொழுதின் ஊதியத்தை அன்றைய சமையலுக்குச் செலவிடுபவர்கள். 300 ரூபாயை மொத்தமாகக் கொடுத்து சிலிண்டர் வாங்குவது என்பது இவர்களுக்கு இயலாத விஷயம். இவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவும் 3 லிட்டராக குறைக்கப்படுகிறது.
இந்த அவல நிலையை இடைத்தரகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எரிவாயு இணைப்பை அடமானமாகப் பெற்று, வீட்டுப்பயன்பாடு சிலிண்டர்களை வணிக நிறுவனங்களுக்கு இரட்டிப்பு விலையில் விற்கிறார்கள். இதற்காக அந்த ஏழைக் குடும்பத்துக்கு ஒரு சிறிய தொகை தரப்படுகிறது.
மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதைக் கொடுக்கும்போதுதான் அவர்கள் அதை மகிழ்ச்சியுடனும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வார்கள். தேவை இல்லாதது அல்லது சக்திக்கு மீறியது கொடுக்கப்பட்டால், அதை தங்களுக்குத் தேவைப்படும் பொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே செய்வார்கள் என்ற அடிப்படை உண்மை கூட ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
பயனாளிகளைச் சரியாகத் தேர்வு செய்வதும் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்தும் நிதிநிலைக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொண்டு இலவசங்களை வழங்குவதும்தான் இத் திட்டத்தை பயனுள்ளதாக மாற்றும். கள்ளச்சந்தையும் தவிர்க்கப்படும்.
தேர்தல் வாக்குறுதி என்பதால், ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்வத்தினால் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆர்வமே பல தவறுகளுக்கு வழிகோலும்போது, திட்ட அமலாக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து, தகுதியுள்ள பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.
“வருமுன் காப்பவன்தான் புத்திசாலி, அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி’ என்பதுதான் “வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’.