இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.
இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.
 |
 |
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு |
இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.
செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
BBC Specialஎழுச்சியுறும் இந்தியா
 |
 |
எழுச்சியுறும் இந்தியா |
இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.
இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.
குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்
இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1
கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2
இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
்
குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.
இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.
பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.
சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.
ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.
சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.
பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.
சோம. நடராஜன், கரூர்.
ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.
விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.
அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.
2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.
உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.
2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.
அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.
ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.
“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.
தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.
கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.
2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.
பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.
நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.
ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.
நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.
மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.
இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.
சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.
2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.
ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.
நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.
பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.
பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.
2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.
மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.
கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.
கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.
தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.
பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.
மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.
உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.
20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.
அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்
மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.
இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.
பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.
பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.
* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.
* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.
* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.
* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.
* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.
* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.
* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.
* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.
* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.
* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.
* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.
* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.
* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.
* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.
* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.
====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்
கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:
கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.
விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.
நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.
அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.
====================================================
வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்
புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.
மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.
ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.
எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.
நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.
வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?
நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.
பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.
பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
====================================================
பணவீக்கத்துக்கு மருந்து
இராம. சீனுவாசன்
“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.
ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.
இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.
பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.
“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.
“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.
பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.
பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.
இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.
எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.
(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).
தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு
வி. கிருஷ்ணமூர்த்தி
சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.
தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.
மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.
இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.
கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.
இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.
இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.
காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
வருமான வரி
என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)
வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)
இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.
ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.
இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:
கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.
2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.
3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.
4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.
5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.
6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.
7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.
8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.
9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.
இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.
வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.
1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.
2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.
3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.
– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.
– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.
இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.