குன்றிவரும் எண்ணெய் வளம்
என். ரமேஷ்
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா அண்மையில் தெரிவித்தார். ஆனால், விலைஉயர்வை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் இதுவரை கண்டிராத அளவுக்கு – ஒரு பீப்பாய் (159 லிட்டர்) 92 அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது.
1978 ஆம் ஆண்டு 13 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, 2007 அக்டோபரில் 92 டாலரை எட்டியுள்ளது. இது விரைவில் 100 டாலரை எட்டக்கூடும். இந்த விலைஉயர்வுக்கு ஈரான்மீது அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாகக் கூறப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள், அரசுகள் வெளிப்படையாக கூறத்தயங்கும் உண்மை ஒன்று உள்ளது.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட “எரிசக்தி கண்காணிப்புக் குழு’ என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் உச்சபட்ச பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி அளவு 2006 ஆம் ஆண்டிலேயே எட்டப்பட்டுவிட்டது; இனி ஆண்டுதோறும் சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கிறது.
தற்போதைய உற்பத்தி அளவான நாளொன்றுக்கு 8.10 கோடி பீப்பாய்கள் என்பது 2030 ஆம் ஆண்டில் 3.9 கோடி பீப்பாய்களாகக் குறையும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டு உற்பத்திக்குச் சமம். ஆனால், அப்போதைய மக்கள்தொகையைக் காட்டிலும் 2030-ல் உலக மக்கள்தொகை இரு மடங்காகியிருக்கும்.
நிலம், கடல், ஆர்க்டிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 1,25,500 கோடி பீப்பாய் அளவு எண்ணெய் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தாலும் இந்த அளவு 85,400 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தியின் சரிவு காரணமாக விலைஉயர்வு இனி தொடரும். மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக விளைவுகள் உண்டாகும் எனப் பல வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் இராக் போருக்குக் காரணம் பெட்ரோலியம்தான் என்பதை அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். (தினமும் 2.06 கோடி பீப்பாய்களை நுகரும் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, 83.67 லட்சம் பீப்பாய்கள்தான்).
பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, டீசல் என்ஜின் ரயில்களின் போக்குவரத்து குறைவது மட்டுமல்ல; மிகப் பெரும் உணவுப் பஞ்சம், அதைத் தொடர்ந்து சமூகச் சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைக்க நேரிட்டால், பற்றாக்குறை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தொழில்துறையில் பாதிப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்படலாம்.
உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தனது உள்நாட்டுத் தேவை காரணமாக, 2025-ல் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், தற்போது பெட்ரோலியப் பொருள்களின் உதவியால், ஒருவருக்குத் தேவையான உணவை 20 நிமிஷ உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்ய முடிகிறது. பெட்ரோலியம் இல்லையெனில் மூன்று வாரம் பாடுபட்டுத்தான் ஒரு நாள் உணவை உற்பத்தி செய்ய முடியும். மற்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதேபோலத்தான்.
எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் அனுபவித்து வரும் நெருக்கடிபோக, கடும் உணவு நெருக்கடியையும் சந்திக்க உள்ளன.
இந்த நிலைமையைச் சமாளிக்க அரசிடம் திட்டங்கள் இல்லை. தங்களது லாபம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், உருவாகி வரும் நெருக்கடியை மறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முயலுகின்றன.
இவையாவும் சில “சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்’ அதீத கற்பனை என யாரும் கூற முடியாத அளவுக்கு காரணிச் சான்றுகள் பெருகி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களால் பெரிய அனுகூலங்களைப் பெற்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பண்ணை வீடு, நாட்டின் மின்சாரத் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை; முழுக்க முழுக்க காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற மரபுசாரா வளங்களிலிருந்து எரிசக்தி பெறுகிறது! துணை அதிபர் டிக் செனியோ, எண்ணெய் நிறுவனங்களிலிருந்த தமது முதலீடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டார்.