ஆபல் பரிசு
“கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்று மதிப்புடன் குறிப்பிடப்படும் ஆபல் பரிசு, கணிதத்தில் தனிப்பெரும் சாதனை புரியும் மேதைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். நோபல் பரிசு போலவே மிக உயர்ந்த பரிசுத் தொகை (ரூ.4.5 கோடி) கொண்டது.
நார்வே நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் நினைவாக, ஆண்டுதோறும் ஆபல் பரிசு வழங்கப்படும் என 2001-ல் நார்வே அரசு அறிவித்தது. 2003-ம் ஆண்டு முதன் முதலில் ஆபல் பரிசு வழங்கப்பட்டது.
நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (1802-1829), நமது நாட்டு மேதை ராமானுஜத்தைப் போலவே, மிக இளம் வயதிலேயே கணிதத்தில் பல சாதனைகள் புரிந்தவர். ராமானுஜத்தைப் போலவே மிக இளம் வயதிலேயே காச நோயால் தாக்கப்பட்டு உயிரைப் பறிகொடுத்தவர். அபிலியன் சார்பு, அபிலியன் குலம், அபிலியன் தேற்றம் போன்றவை கணிதத்துக்கு ஆபலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
கணிதத்துக்கு நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே “ஆபல் பரிசு’ உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இரண்டாம் ஆஸ்கர் என்ற மன்னர் அதற்கான நிதியுதவி செய்ய முன்வந்தார். ஆனால் நார்வே மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து 1905-ல் ஆபல் பரிசுத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நார்வே “ஆபல் பரிசை’ அறிவித்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற 5 கணித மேதைகள் கொண்ட குழு, நார்வே அறிவியல் கழகத்தின் சார்பில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான ஆபல் பரிசைப் பெற்றவர் சென்னையில் பிறந்த, அமெரிக்க வாழ் கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசா எஸ் வரதன்.
“ஃபீல்ட்ஸ் மெடல்’ எனும் பரிசும் கூட, கணிதத்துக்கான நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வழங்கப்படுவதாகும். இதேபோல், சுவீடன் அரச கழகம் 1982 முதல் வழங்கி வரும் “கிராஃபூர்டு பரிசு’, 2004 முதல் வழங்கப்பட்டு வரும் “ஷா பரிசு’ போன்றவையும் கணிதத்துக்கான நோபல் பரிசு என்றே வர்ணிக்கப்படுகின்றன.