தவறான முன்னுதாரணம்!
பெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
முக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.
புதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் காரணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.
சமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால்? பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது!
அத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக? எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக!
பெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு மாதிரியா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்!