தீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்
இந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
வேல்
“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
மச்சக்காரன்
நான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.
“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.
கண்ணா மூச்சி ஏனடா
கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.
சத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அழகிய தமிழ்மகன்
முதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பொல்லாதவன்
தனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
எவனோ ஒருவன்
தேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.
பழனியப்பா கல்லூரி
கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.
இவை தவிர,
- விக்ரம் நடித்த ‘பீமா,’
- அஜீத் நடித்த ‘பில்லா’
ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.