Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prisoner’ Category

External Affairs – Indians held in Foreign Prisons: N Sureshkumar

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்

என். சுரேஷ்குமார்

ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்

  • சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
  • துபாயில் 825,
  • சிங்கப்பூரில் 791,
  • பாகிஸ்தானில் 655,
  • மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.

இதேபோல

  • லண்டனில் 239 பேர்,
  • அமெரிக்காவில் 218,
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
  • ஆப்பிரிக்காவில் 29 பேர்,
  • பெல்ஜியம்,
  • டென்மார்க்,
  • பிரான்ஸ்,
  • ஹாங்காங்,
  • லிபேரியா,
  • நெதர்லாந்து,
  • சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
  • இத்தாலி,
  • ஸ்பெயின்,
  • கிரீஸ்,
  • போர்ச்சுகலில் 103 பேர்,
  • செக் குடியரசு,
  • போலந்து,
  • பெலாரஸ்,
  • மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.

இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.

இரண்டாவது நமது இந்திய அரசு.

புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.

வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.

இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.

வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.

குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?

Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »

Visually impaired Madurai student researches on Life sentenced inmates

Posted by Snapjudge மேல் மே 21, 2007

முகங்கள்: தந்தை காட்டிய வழியம்மா!

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை மத்தியச் சிறை. சிறையின் பெரிய கதவுகள் திறந்து அவர்களுக்கு வழி விடுகின்றன. அந்த இளம் பெண்ணும் அவருக்குத் துணையாக இன்னொரு பெண்ணும் உள்ளே நுழைகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளிடம் தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வினா நிரலைக் கொடுக்கிறார்கள். போய்விடுகிறார்கள். பின்னர் மீண்டும் வருகிறார்கள். கைதிகளோடு அன்போடு பேசு கிறார்கள்.

கேள்விகள்…பதில்கள்…கேள்விகள்…

அந்த இளம் பெண் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் எம்.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.பிரியா. ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்தது, தனது படிப்பிற்கான திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக. பிரியா எல்லாரையும் போல இருந்தால் தனியாகவே வந்து கூட ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்திருக்கலாம். சிறுவயதில் பார்வையை இழந்த அவருக்குத் துணையாக ஒருவர் வரவேண்டியிருக்கிறது. பிரியாவைச் சந்தித்துப் பேசினோம். சரளமாக எந்தவிதத் தடங்கலுமின்றி அவர் பேசுகிறார்.

”சிறுவயதில் நரம்பு பாதிப்பு காரணமாக கண் தெரியாமல் போச்சு. என் அப்பா எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் என்னால் எம்.ஏ. அளவுக்குப் படிக்க முடிந்தது. எங்க அப்பா 3 வது வரை படித்தவர்தான். டீக்கடை வச்சிருக்கார். ஆனால் என்னைப் படிக்க வச்சு கல்லூரிப் பேராசிரியராக்கிப் பாக்கணும்ங்கிறதுதான் அவுங்க லட்சியம். திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் டூ வரை படிச்சேன். அதற்குப் பின்பு பாத்திமா கல்லூரியில் பி.ஏ. இப்போது லேடி டோக் காலேஜில் எம்.ஏ. ஸ்கூல் படிக்கிறப்பவே ரொம்ப ஆக்டிவ்வா இருப்பேன். நிறையப் போட்டிகளில் கலந்துப்பேன். திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை லீவில் வீட்டுக்கு வரும்போது ஸ்கூலில் கொடுத்த நான்கைந்து பிரைஸ்களோடுதான் வீட்டுக்கு வருவேன்.

எங்க அப்பா எனக்குத் துணையாக இருக்கிறார் என்கிற தைரியம்தான் எம்.ஏ. திட்ட அறிக்கைக்காக ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசும் துணிச்சலைத் தந்தது. சாதாரணமாக நாலு புஸ்தகத்தைப் படிச்சிட்டுக் கூட ஆய்வறிக்கை தயார் பண்றவங்க இருக்காங்க. ஆனால் நான் ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு நெனைச்சேன். அதுவும் ஆயுள் தண்டனைக் கைதிங்க பாதிக்கப்பட்டவங்க. நான் பார்வையில்லாம பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்க லைஃப்ல நடந்த ஒரு இன்ஸிடென்ட்ல ஜெயிலுக்கு வந்திருக்காங்க. இந்த ஆயுள் தண்டனை வாழ்க்கையிலே அவுங்க நிறைய இழந்து பாதிக்கப்பட்டிருக்காங்க. எனவே அவுங்களைச் சந்தித்துப் பேசுறதுன்னு முடிவெடுத்தேன்.

மத்தியச் சிறைச்சாலைக்குள் சென்று ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசுறது ரொம்ப ஈஸின்னு நினைச்சேன். ஆனா அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லேன்னு போகப் போகத்தான் தெரிஞ்சது. டிஐஜி வரை பார்த்துப் பேசினேன். ஆனால் சென்னையில் ஐஜி அனுமதி தரணும்னு சொன்னாங்க. பெர்மிஸன் வாங்கவே 5 மாதம் ஆயிடுச்சி. பெர்மிஸன் தர்றதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. எங்க வீட்டுக்கு என்கொயரிக்கு வந்தாங்க. என் மேல் ஏதாவது போலீஸ் கேஸ் ஃபைலாகி இருக்கான்னு பார்த்தாங்க. கடைசில பெர்மிஸன் கொடுத்தாங்க.

பெர்மிஸன் கொடுத்தும் ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போய்ப் பார்க்க பயமா இருந்துச்சு. நான் ஒரு பெண். அதிலும் பார்வை இல்லாதவ. ஆயுள் தண்டனைக் கைதிங்க எப்படி இருப்பாங்களோ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில இருப்பாங்க. கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இருந்தும் தைரி

யத்தை வரவழைச்சிக்கிட்டு அமுதசாரதி என்கிற தோழியின் துணையோட நான் போனேன். ஆயுள்தண்டனைக் கைதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் தொகுத்து வினாநிரல் வடிவில் எடுத்துக்கிட்டுப் போனேன்.

அவுங்களோட பேசினவுடன்தான் நான் பயந்தது தப்புன்னு தெரிஞ்சது. அவுங்க கிட்ட பேசுறப்ப சொந்தக்காரங்க கிட்டப் பேசுறது மாதிரி உணர்ந்தேன். அவுங்க ப்ராப்ளம்ஸ் எல்லாம் சொன்னாங்க.

நான் சந்தித்த கைதிங்க மொத்தம் 80 பேர். 22 வயதிலேருந்து 72 வயது வரை உள்ளவங்க. பலர் கிராமப்புறத்தில் இருந்து வந்தவங்க. சிலர் படிச்சவங்க. நான் அவுங்களுக்குத் தகுந்த மாதிரி பேசினேன்.

அதிலே பல பேருக்கு இதுதான் முதல் குற்றம். ஏதோ ஒரு கோபத்துல உணர்ச்சி வசப்பட்டுத் தவறு செய்துவிட்டுச் செயிலுக்கு வந்தவங்க. இப்ப மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவுங்களிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை பேச ஆளில்லை. 14 வருஷம் ஆயுள் தண்டனைன்னாலும் நல்லபடியா நடந்துக்கிட்டா சீக்கிரம் வெளியே விட்டுடுவாங்க.

ஜெயிலுக்குள்ளே அவுங்களுக்கு வேலை தர்றாங்க. ஆனால் வருஷம் பூரா இல்லை. வருசத்திலே 3 மாதம் வேலையிருந்தா அதிகம். அதில் வர்ற வருமானத்தில் பாதியை அவுங்க சாப்பாட்டுக்கு எடுத்துக்குவாங்க. 20 சதவீதம் வருமானம் அவுங்க செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்விடும். மீதி முப்பது சதவீதம்தான் அவுங்க குடும்பத்துக்கு. இதனால் அவுங்க பிள்ளைங்களுக்கு படிப்புச் செலவுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க முடியலை. இதெல்லாம் அவுங்க சொன்னது.

சந்தர்ப்ப சூழ்நிலையினால தவறு செஞ்சிட்டு இப்ப அவுங்க படுற பாடு கஷ்டமாத்தான் இருக்கு. அவுங்களுக்கு வருஷம் பூரா வேலை கொடுத்தா நல்லது.

அரசாங்கம் ஸ்கூல் புக் பிரிண்ட் அடிக்கிறது, யூனிஃபார்ம் தைக்கிறது போன்ற வேலைகளை இவுங்களுக்குக் கொடுக்கலாம். இவுங்க தயாரிக்கிற பொருள்களை காதி கிராப்ட் மூலம் விற்க ஏற்பாடு பண்ணலாம். இப்படியெல்லாம் செஞ்சா ஓரளவுக்கு வருமானம் வரும். இவுங்க வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சி. இவுங்க பிள்ளைங்களாவது நல்லா படிச்சு முன்னுக்கு வர வேண்டாமா?”

பிரியா சரளமாகப் பேசுகிறார். பார்வைக் குறைபாடின்மை அவரது அறிவையும் திறமையையும் கடுகளவும் பாதித்ததாகத் தெரியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

” எனக்காக எங்க அப்பா படுற கஷ்டம்தாங்க முதல் காரணம். அவுங்க என்னைப் பெரிய ஆளா ஆக்கணும்னு நெனைக்கிறாங்க. அதுக்காக என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் போற இடங்களுக்கெல்லாம் துணைக்கு வர்றாங்க. பிளஸ் டூ வரைக்கும்தான் பார்வையற்றோர் பள்ளியில் படிச்சேன். அதுக்குப் பின்னால காலேஜில் நார்மலான ஸ்டூடன்ட்ஸ் கூடத்தான் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்க எனக்கு உதவி செய்றாங்க. பாடங்களையெல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொடுக்குறாங்க.

பார்வைக் குறைபாடு உள்ளவங்க பொது அறிவை வளர்த்துக்கிறதுக்காக மதுரை ரோட்டரி கிளப், விஸ்வநாதபுரத்தில் ஹெலன் ஹெல்லர் டாக்கிங் லைப்ரரின்னு ஒண்ணை நாலு வருஷத்துக்கு முன்ன திறந்தாங்க. எங்க அப்பா என்னை அங்க கூட்டிட்டுப் போயி மெம்பரா ஆக்கிட்டாங்க. அங்க எல்லா சப்ஜெக்ட்டுக்கும் ஆடியோ கேஸட் இருக்கு. அதை வாங்கிட்டுப் போயி டேப் ரெக்கார்டர்ல போட்டுக் கேக்க வேண்டியதுதான்.”

எம்.ஏ. முடித்ததும் எம்ஃபில் சேர்ந்து படித்து கல்லூரி ஆசிரியையாவதுதான் பிரியாவின் லட்சியம். அவருடைய அப்பாவின் விருப்பமும் கூட. ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்து ஆய்வு செய்வதை சாதாரணமாக இளம் பெண்கள் விரும்பமாட்டார்கள். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பிரியாவிற்கு கல்லூரி ஆசிரியை ஆவதா பெரிய விஷயம்?

Posted in Blind, Correctional, Faces, Female, inmates, Jail, Lady, Life sentence, Paper, people, Ph.d, Prison, Prisoner, Research, Rotary, sightless, Talent, Visibility Impaired, visually impaired, Women | Leave a Comment »