தமிழில் பெயர் மாற்றினால் கட்டணக் குறைப்பு: தெளிவில்லா ஆணையால் நடைமுறைக்கு வராத நிலை
கே.பாலசுப்பிரமணியன்
சென்னை, செப். 27: தமிழில் பெயர் மாற்றினால் பிரசுரக் கட்டணம் ரூ. 50 ஆகக் குறைக்கப்படும் என்ற உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்ப் பெயர் மாற்றம் என்று எதை எடுத்துக் கொள்வது என்பதில் குழப்பம் நீடிப்பதே இதற்குக் காரணம்.
சென்னை அண்ணா சாலையில் உள்ளது எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை. இங்குதான், நமது பெயர் மாற்றங்களைப் பதிவு செய்து, சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
இதற்கு, முதலில் அரசு வெளியீடுகள் உதவி இயக்குநரை நேரில் சந்தித்து உரிய பதிவேட்டில் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் பிறகு, பிரசுரக் கட்டணமாக ரூ. 350, சான்றிதழ் நகல்கள், தபால் செலவுக்கு ரூ. 65 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆக, நமது பெயர்களைப் பதிவு செய்ய மொத்தமாக, ரூ. 415 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ரொக்கமாக அல்லது வரைவோலையாக (டி.டி.) செலுத்த வேண்டும்.
இதன் பிறகு, விண்ணப்பப் படிவங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமைதோறும் வாராந்திர அரசு இதழில் வெளியிடப்படும்.
தமிழில் பெயர் மாற்றினால்… கடந்த மாதம் சட்டப் பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், “தமிழில் பெயர் மாற்றினால் சலுகை’ என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, தமிழில் பெயர் மாற்றுவோருக்கு பிரசுரக் கட்டணம் ரூ. 50 ஆகக் குறைக்கப்பட்டது. கட்டணத் தொகை ரூ. 350-லிருந்து ரூ. 50-ஆக குறைக்கப்பட்டதால், தமிழில் பெயர் மாற்றத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறையிடம் நாள்தோறும் இருபதுக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரைத் தமிழில் மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
சிக்கல் வந்தது: ஆனால், அரசாணையில் தமிழில் பெயர் மாற்றம் என்பது என்ன என்று தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை.
- இருக்கும் பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பதா அல்லது
- தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வதா என்று கூறப்படவில்லை.
இதனால், தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பி வரும் மக்களுக்கு, அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை அதிகாரிகள் நிலைமையை விளக்கிக்கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
விளக்கம் கேட்கின்றனர்: எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறையின் கீழ் வருகிறது. தமிழில் பெயர் மாற்றம் என்பதற்கு உதாரணத்துடன் விளக்கம் வேண்டும் என எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை அதிகாரிகள் அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“”அரசிடம் விளக்கம் கேட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் எந்த பதிலும் வரவில்லை. விளக்கத்துக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.