Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Primary’ Category

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

Primary Education – Tamil as a Language in Schools for youth

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழுக்கு இனி பொற்காலம்!

தமிழினியன்

தமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.

சிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்!

தமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.

தமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை! என்பது அவரது ஆதங்கம்.

அந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.

ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.

பிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.

தமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.

ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.

தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன்? சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது? வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.

தமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.

தாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.

குழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.

அதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.

புத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.

இத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.

அரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.

அந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).

————————————————————————————————-
தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்

வி.என். ராகவன்

திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.

ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.

இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

ஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

சில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.

ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

தமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.

இந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

குழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:

“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

Posted in CBSE, Colleges, Education, HSC, ISC, KG, Language, LKG, Matric, Matriculation, Metric, Metriculation, Primary, Schools, Students, Tamil, Thamizh, UKG, univ, University, Youth | 4 Comments »

Chirac backs Sarkozy in poll race – France Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு

நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)
நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)

பிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.

12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.

ஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.

இந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பைரோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.

Posted in Chirac, Elections, Euro, Europe, France, Francois Bayrou, French, PM, Polls, President, Primary, Prime Minister, Race, Sarkozy, support, UMP | Leave a Comment »

No more Entrance Exams – Will it benefit Rural Students?

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?”

அ.கி. வேங்கடசுப்ரமணியன்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.

அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.

கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.01 லட்சம்.

நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.76 லட்சம்.
கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.

2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்

கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,

நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.
கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.

ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?

முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.

மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.

கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.

எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.

இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.

தொலைநோக்குக் கல்வி

கி. இராசா

மக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.

இக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா? என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா? என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

இத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்!

ஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.

பெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.

ஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.

அனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.

1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.

பெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.

ஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.

இன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.

வாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.

இதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.

இவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.

(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).

Posted in Action Plan, Admissions, Advices, Age, Ak Venaktasubramanian, AK Venkatasubramanian, Bachelors, Children, City, Degree, Dinamani, Divide, Education, Engineering, Entrance Exam, Female, Girl, High School, Higher Studies, Human Resources, JEE, Ki Rasa, Kids, Kindergarten, Knowledge, Masters, medical, Money, Op-Ed, Opinion, Primary, professional, Rich vs Poor, Rural, Secondary, Strategy, Student, Students, Study, Suggestions, Tamil Nadu, Teacher, Technology, TN, TNPCEE, Urban, Village, Women | Leave a Comment »