புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”
உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.
நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”
-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.
இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.
உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?
தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.
கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.
சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?
டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.
நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.
கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?
கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.
உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?
உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.
“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.
ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.
இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?
நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.
உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.
கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.
கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.