உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்
ஆர். அறிவானந்தம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.
கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.
செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.
ரூபாய் மதிப்பு உயர்வால்
- ஆட்டோமொபைல்,
- உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
- டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
- ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
- கைவினைப் பொருள்
உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்
- சாப்ட்வேர் நிறுவனங்கள்,
- பிபிஓ நிறுவனங்கள்,
- ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
- கிரானைட்,
- கடல் உணவு,
- தேயிலை,
- என்ஜினீயரிங்,
- முந்திரி,
- மாம்பழம் மற்றும்
- நார் பொருள்களை
தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.
அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.
கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.
மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.
நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.
முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.
ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.