ஹோமியோபதி மருந்து!
“ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது’ தலையங்கம் (5-10-06) கண்டேன்.
சிற்றூர்ப்புறம், நகர்ப்புறம் சார்ந்த எந்தப் பகுதிகளையும் விட்டு வைக்காது மக்களை வாட்டித் துன்புறுத்துகிறது சிக்குன் குனியா காய்ச்சல் என்ற ஆள் முடக்கு நோய். நபர்களின் உழைப்புத் திறனை முடக்கிப் போட்டு ஒன்றும் செய்ய இயலாமல் ஆக்கும், சிக்குன் குனியாவிற்கு முழுமையான மருந்து “ஒத்தியல்’ என்றழைக்கப்படுகின்ற ஹோமியோபதி மருத்துவத்திலேயே உள்ளது. வந்த பின் காக்கும் மருந்துகளோடு, வராமலே தடுக்கின்ற மருந்துகளும் ஒத்தியல் மருத்துவத்திலேயே உள்ளன. தேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களால், நோயாளிகளின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்து ஒத்தியல் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு இம்மியளவும் பிசகாமல் இதனை உட்கொள்ள ஆரம்பித்தால், எலும்பு இணைப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான வலிகள் அறவே குறைந்து விடுகின்றன. நோய்த் தாக்குதலுக்கு ஆளான இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் முழுமையான குணம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இது ஒத்தியல் மருத்தவத்தாலேதான் சாத்தியம். மதுரையைச் சார்ந்த “நலம்’ (NALHAM – New Association for Learning Homoeopathy and Alternative Medicines, Reg. . 96/2004) என்ற தன்னார்வ ஒத்தியல் மருத்துவ அமைப்பு சிற்றூர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தீவிரமான மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறது.
இரா. சிவக்குமார்,
மதுரை.
3 நாள் மருந்து
சிக்குன் குனியா கண்டவருக்கு மிகவும் எளிமையானதும் விரைவில் குணங்காணக் கூடியதுமான மருத்துவம் ஹோமியோபதியில் உள்ளன. இந்நோய் தாக்குதலுக்கான அனைத்து வயதினர்க்கும் 3 நாள்களுக்கு யூபட்டோரியம் பெர் (200) என்ற மருந்தும் மூட்டுவலியைக் குணப்படுத்த ரஸ்டாக்ஸ் (200) என்ற மருந்தும் போதுமானது. ஹோமியோபதி மருந்துகளை ஆந்திர மாநில அரசு அங்கீகரித்து இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஹோமியோபதி மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடனே நடத்தப்படுகிறது. “”எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலா குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” என்று பல ஆண்டுகளுக்கு முன் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டிய மகாகவி பாரதியாரின் நினைவுதான் வருகிறது.
த. நாகராஜன்,
சிவகாசி.
நோய்க்கு மூலகாரணம்
வெறும் கொசுக்கடியால் மட்டும் இந்நோய் தாக்குவதில்லை. பல்லாண்டுகளாக ரசாயன உரப்பொடிகளின் மூலமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமாகவும் நம் உடலில், ரத்தத்தில் ஏற்றப்பட்டுள்ள நச்சுகளின் காரணமாகத்தான் உடலை முடக்கும் சிக்குன் குனியா நோய் ஏற்படுகிறது.
செயற்கையான நச்சு வேளாண்மையை விட்டுவிட்டு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியே சிக்குன் குனியா நோயாகும். இந்த எச்சரிக்கையை மதித்து நடக்க வேண்டும்..
மு. தனராசு,
தேவாரம்.
நிலவேம்பு
டெங்கு காய்ச்சலைக் குணமாக்கும் நிலவேம்பு. நசுக்கிய நிலவேம்பு ஐந்து கிராம், வெந்நீர் நூறு மில்லி, ஏலக்காய் ஒன்று இவற்றை ஆறு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி தினசரி காலை, மதியம், மாலை வெறும் வயிற்றில் முப்பது மில்லி வீதம் குடிக்கவும். கஷாயத்தில் இனிப்புக்கு பனை வெல்லம் சேர்க்கவும். பூண்டு போட்டு காய்ச்சிய புழுங்கல் அரிசிக் கஞ்சி குடிக்கவும். இதுபோல ஐந்து நாள்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல், முறைஜூரம், செரியாமை முதலிய நோய்கள் குணமாகும்.
மரு.க.கோ. மணிவாசகம்,
தேவூர்.