பெற்றோரைப் பாதுகாக்க…
வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைக் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
கிராமப் பகுதிகளைப் பொருத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும் முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.
நாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர் இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22 ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.
சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப் பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்து எஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது
கோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
மசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரைப் புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.