புதிய அறிவியல் கண்டுபிடிப்பு: தமிழக மாணவருக்கு 2 தங்கப்பதக்கம்
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற கோவை மாணவர் அபிலாஷுடன் இன்டெல் நிறுவன இந்தியாவுக்கான மேலாளர் ராமமூர்த்தி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பேராசிரியர் அனுப் சின்ஹா (வலது).
கோவை, ஜன. 31: புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருதாக கோவையைச் சேர்ந்த மாணவருக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இன்டெல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேசிய அளவிலான கண்காட்சியை ஏற்பாடு செய்வதோடு, ஆண்டுதோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியையும் தில்லியில் நடத்துகின்றன.
கடந்த ஆண்டில் (2006) இத்தகைய போட்டி மற்றும் கண்காட்சிக்கான அழைப்பில் 2,000 பேர் விண்ணப்பம் செய்தனர். தேசிய அளவில் 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்தனர்.
இதில் கோவையைச் சேர்ந்த மாணவர் எம்.அபிலாஷ் (தற்போது திருச்சி சின்மயா வித்யாலயத்தில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்) இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். விலங்கியல் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காகவும் வயது வரம்புத் தகுதிக்குள்ளான புதிய கண்டுபிடிப்பாளருக்கான விருதாகவும் ஒரே சமயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
வரும் பிப். 13 முதல் 16 வரை தில்லியில் நடைபெறும் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அபிலாஷ் கலந்துகொள்கிறார்.
பயன்படுத்திய பின் வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பயன்படுத்திய எக்ஸ்ரே பிலிம்களைக் கொண்டு புதுமையான, அரிய பூச்சிப் பொறியை வடிவமைத்துள்ளார் அபிலாஷ்.
இவரது தாயார் சங்கீதா பணிக்கர், திருச்சி தாவரவியல் துறையில் பேராசிரியையாக உள்ளார்.