ம.பி. மாநில பள்ளிகளில் பலத்த எதிர்ப்பையும் மீறி சூரிய நமஸ்காரம் அமல்
போபால், ஜன.26-
மத்தியப் பிரதேச மாநில பா.ஜனதா அரசு, பலத்த எதிர்ப்பையும் மீறி பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம் செய்யும் திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. இருப்பினும் சூரிய நமஸ்காரம் கட்டாயமில்லை என்று அறிவித்து உள்ளது.
போபாலில் டி.டி.நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது யோகாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர். மாவட்ட அளவில் மந்திரிகள் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். ஷாடால் என்ற இடத்தில் சூரிய நமஸ்காரம் செய்த 6-ம் வகுப்பு மாணவன் உத்தம் புஜ்ஜியா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை அமல்படுத்தியது சட்டவிரோதமானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மாநில பிரிவு கூறி உள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. போபாலில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.