புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!
நீரஜா செüத்ரி
அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.
காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
- “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
- “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
- “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
- ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.
இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.
வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.
காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.
காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த
- சச்சின் பைலட்,
- சுப்ரியா சுலே,
- ஷாநவாஸ் உசைன்,
- ஜெய பாண்டா,
- பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.
“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.
கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?
ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.
ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழில்: சாரி.