Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prabhudeva’ Category

VIP – Prabhudeva: Gossips, Change of Directors, Rani Mukherjee Smoking

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

திரைப்பட வரலாறு 886
பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி”
2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி

பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.

திரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

பாரதிராஜாவுக்கு மரியாதை

“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.

தமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் என்பதை என் அன்பினால் வெளிப்படுத்திவிட்டு வந்தேன்.

இதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.

அவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.

ரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.

ரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”

இவ்வாறு தாணு கூறினார்.

வி.ஐ.பி.

தாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-

“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.

அந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல் ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.

“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.

நான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர்! ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.

மறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.

டைரக்டர் வசந்த்

தயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.

நான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.

“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.

நான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும், “சார்! ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.

“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.

“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.

நான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தேதி முக்கியம். அதை கருத்தில் கொண்டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.

சொன்னபடி மறுநாள் வந்தார். “சார்! நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.

அப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா?” என்று கேட்டேன்.

டைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு?” என்று கேட்டேன்.

அப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த்! படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா?” என்று கேட்டேன்.

ரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.

டைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார்! நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.

மறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.

அன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.

கதை சொல்ல வந்தவர்

இந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.

கதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.

நான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.

நாற்பதே நாளில் செலவு அதிகம் பண்ணாமல் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.

அதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.

புது இளைஞர்! ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.

விபரீதம்

ஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா? என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.

சசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார்! நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்! அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.

எடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு! சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா?” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்! பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.

நான் விடவில்லை. “பிரபு! ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.

“இல்லை சார்! உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.

நான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது?” என்று கேட்டேன்.

இதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார்! எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.

பிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.

இதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”

திரைப்பட வரலாறு 887
தாணு தயாரித்த “வி.ஐ.பி”
சிம்ரன் அறிமுகம்


கலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.

“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.

இந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.

என்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.

ஏவி.எம். பொன் விழா படம்

கதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.

நான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.

“சொல்லுங்க சார்!” என்றேன்.

“ஒண்ணுமில்லை சார்! நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் பேசினார். ஏவி.எம்.மின் பொன் விழா ஆண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.

நான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.

“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு!” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.

பிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார்! விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆமா பிரபு! ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”

என்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”

அந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ரூ.40 லட்சத்தில் அரங்கு

வி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிரமிப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.

நான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.

சிம்ரன் அறிமுகம்

“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்

வந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.

எனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்

அனுப்பிவிட்டோம்.

ராணி முகர்ஜியின் “புகை வளையம்”

இதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது! இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.

அப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

இதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் போனில் பேசினார். “சார்! நான் புதுமுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.

இதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”

Posted in Abbas, AVM, Barathiraja, Bharathiraja, Cinema, Dhaanu, Directors, Films, Gossips, Kilakku Seemaiyiley, Kizhakku Cheemaiyile, Lalila, Movies, Mukherjee, Prabhudeva, Prabudeva, Ramba, Rani, Rumba, Sasi, Simran, smoking, Thaanu, Vasanth, VIP | Leave a Comment »

Dance Master Raguram’s daughter – Gayatri Raghuram Marriage

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

நடிகை காயத்ரிரகுராம் திருமணம்: நடிகர், நடிகைகள் வாழ்த்து 

சென்னை, டிச.8- பிரபல தமிழ் நடிகை காயத்ரி ரகுராம். விசில், ஸ்டைல், சார்லிசாப்ளின்,பரசுராம் உள்ளிட்ட படங்களில்நடித் துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார்.

சில வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். அமெரிக்காவில் தொழில் கல்வி படிக்கச் சென்றார். காயத்ரிரகுராமுக்கும் அமெரிக்காவில் கம்ப்ïட்டர் என்ஜினீயராக பணியாற்றும் தீபக்குக்கும் திருமணம் நிச் சயிக்கப்பட்டது.

காயத்ரி ரகுராம்-தீபக் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

  • நடிகர் எஸ்.வி.சேகர்,
  • நடிகைகள் குஷ்பு,
  • ஸ்ரீபிரியா,
  • சுகாசினி,
  • டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை அதே மண்டபத்தில் நடக்கிறது.

Posted in America, Charlie Chaplin, Cine actress, daughter, Deepak, Gayathri, Gayatri Raghuram, Mariiage, Photos, Pictures, Prabhudeva, Raguram, Reception, Santhome, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, USA, Visil, Whistle | Leave a Comment »

Asin gets hurt in Vijay’s Pokkiri song picturization by Prabhu Deva

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006

படப்பிடிப்பில் அஸின் காயம்

சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.

நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.

பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.

உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Posted in Accident, Asin, Blood, Dance Master, Heroine, Ilaiya Thalapathi, Ilaiya Thalapathy, Pokkiri, Prabhudeva, Remake, Rest, Shoes, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil songs, Telugu Cinema, Tollywood, Vijay | 4 Comments »