வாழும்போதே வாழ்த்துங்கள்!
ஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.
பாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி! -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.
ரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.
வழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.
கௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.
(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை! அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.
இத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.
“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.
அப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.
இந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.
பிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.
ஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.
பெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.
அடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.
நாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.
இவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.
ஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.
சாருகேசி