Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prabakharan’ Category

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Anton Balasingham’s Demise – LTTE Aftermath & Eezham’s Future

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள்

பா. கிருஷ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட ஆன்டன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது.

ஆன்டன் ஸ்தானிஸ்லாஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் “வீரகேசரி’ நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை ஹிந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங்கள் மீதும் ஈடுபாடு உண்டு. பாலசிங்கத்தின் தாத்தா கோயில் குருக்களாக இருந்தவர் என்பது இன்னொரு சுவையான தகவல்.

வீரகேசரியில் பணியாற்றிய பாலசிங்கம் சிறிது காலத்தில் அந்தப் பத்திரிகையின் வெளிநாட்டுச் செய்திப் பகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது உலகளாவிய தகவல்கள் மீது அவருக்கு ஏற்கெனவே இருந்த தாகத்தை அதிகரிக்கச் செய்தது.

அதன் பிறகு, கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மனைவி நோய் வாய்ப்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பிரிட்டன் செல்ல நேர்ந்தது. முதல் மனைவி சில ஆண்டுகளில் நோய் முற்றி பிரிட்டனில் இறந்தார். அங்கே ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அடேல் ஆனி என்ற ஆஸ்திரேலிய பெண்ணின் நட்பு, காதலாக மாறி, பின்னர் திருமணமாக மலர்ந்தது.

பாலசிங்கத்தைப் போலவே அடேலும் அறிவுஜீவி. இருவரும் யாழ்ப்பாணம் திரும்பியபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகப் பாடுபட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோதெல்லாம் முக்கியப் பங்கை ஆற்றி வந்தவர் பாலசிங்கம்.

இலங்கை இனப் பிரச்சினையில் போராளிகளுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்தது 1985-ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில்தான். அதில் ஈழப் போராளிக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக அமைந்தன.

1) தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரித்தல்;2) இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநிலப் பகுதியை அங்கீகரித்தல்;

3) தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்;

4) மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் வழங்குதல்.

சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் வரவேற்ற இக்கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால், பேச்சுவார்த்தை முறிந்தது.

இதன் பிறகு, பாலசிங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறும்படி அரசு உத்தரவிட்டது. அவருடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் (டெலோ) தலைவர் சத்தியேந்திரா, ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழக அமைப்பாளர் எஸ்.சி. சந்திரஹாசன் ஆகியோரையும் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால், இதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு மூன்று தலைவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை விலக்கிக் கொண்டது.

திம்பு பேச்சுவார்த்தை தொடங்கி, இந்திய இலங்கை உடன்பாடு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை, நார்வே முயற்சியில் அமைந்த பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் பாலசிங்கத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுடன், புலிகள் 1990-ல் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் முக்கியக் காரணம் பாலசிங்கம்தான். அவருடன் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றியவர்தான் பிரேமதாசா. தனது பழைய நட்பைப் பேச்சுவார்த்தைக்காகப் பயன்படுத்தினார் பாலசிங்கம்.

1980-ம் ஆண்டுகளில் சென்னையில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சாதனங்களைத் தமிழக போலீஸôர் கைப்பற்றியபோது, இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது குவிந்த அனைத்து மாநிலப் பத்திரிகையாளர்களிடம் பிரபாகரன் பேசியதை மொழிபெயர்த்தவர் பாலசிங்கம்.

அதன் பிறகு, 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை உடன்பாடு ஏற்பட்ட வரையில் சென்னை இந்திரா நகரில் செயல்பட்டு வந்த புலிகளின் அலுவலகத்தில் தினந்தோறும் நிருபர்களிடம் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் பாலசிங்கம்.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கடல் வழியாகத் தனது இயக்கத்தினர் மூலம் அழைத்துச் சென்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை நேரடியாகப் பார்த்து, செய்தி சேகரிக்கச் செய்தவர் பாலசிங்கம். அந்த பிரான்ஸ் நிருபர்கள் சென்னை திரும்பியதும் சென்னையில் சில பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கவும் ஏற்பாடு செய்தார் அவர்.

1987-ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய -இலங்கை உடன்பாடு உருவாகும் தருணத்தில், மிகக் கவனமாக நிருபர்களிடம் பேசியவர் பாலசிங்கம்.

“”பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். பத்திரிகைகளின் போக்கு, அணுகுமுறை அவர்களது செய்தித் தேவை குறித்து நன்றாக அறிவேன். அதே சமயம் தமிழ் மக்களின் துயரத்தை எப்படி பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதும் தெரியும்” என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

1987-ம் ஆண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடும் சூழல் கனிந்து வரும் சமயத்தில், இந்திய அரசுடன் தொடர்பு கொண்டவர்களில் பாலசிங்கம் குறிப்பிடத் தக்கவர். ராஜீவ் காந்தியை பிரபாகரன் தில்லியில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் பாலசிங்கம். அந்தத் தருணத்தில், சென்னையில் இருந்தபோது, பாலசிங்கத்திடம் ஒரு முறை நிருபர்கள் “”தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?” என்று கேட்டனர்.

“”ஈழத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் எந்தத் தீர்வுமே ஏற்கத் தக்கது. இதுதான் வேண்டும் என்று இப்போது வலியுறுத்த மாட்டோம்” என்றார் அவர்.

2002-ம் ஆண்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கத் திட்டமிடப்பட்டது.

பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருதி, இந்தியாவில் தங்கி அவர் சிகிச்சை பெற்றபடி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.

“”பாலசிங்கத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்” என்று அப்போதைய பிரதமர் வாஜபேயி கருத்துத் தெரிவித்தார்.

ஆனால், இந்த யோசனை கடைசியில் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, தாய்லாந்து, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முறை “”தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுகிறோம்” என்று முதன் முறையாக அறிவித்தார் பாலசிங்கம். இதையே பின்னர் நவம்பரில் மாவீரர் தினத்தில் வே. பிரபாகரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு “பாலசிங்கத்தின் மறைவினால், நல்ல வழிகாட்டி, சித்தாந்தவாதியை இழந்துவிட்டோம்’ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

புலிகளை அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்லவும், அரசியல் ஆலோசனை கூறி, வழிப்படுத்தவும் மூத்த தலைவர் இப்போது இல்லாததால், புலிகள் எத்தகைய செயலில் ஈடுபடுவார்களோ என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அரசியல் ராஜதந்திரத்தைக் கையாள புலிகள் தரப்பில் முக்கியமானவர் இல்லையே என்ற கவலையை இப்போதைய வெற்றிடம் இலங்கை அரசுக்கும் ஏற்படுத்தும்.

Posted in Anton Balasingham, Colombo, Eelam, Eezham, France, LTTE, Prabakharan, Prabhakaran, Premadasa, Sri lanka, TELO, TESO, Veerakesari, Viduthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »