பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.
குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.
தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.
பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.
விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.
ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.
“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.
இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.
தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.
கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.
அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.