நேரம் ஒதுக்குவாரா அமைச்சர்?
ஜி. சிவக்குமார்
சென்னை, டிச. 5: சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலம் நியமன உத்தரவை வழங்க அதிகாரிகள் முயற்சி செய்வதால், அரசின் பணி நியமன ஆணைக்காக 16 பல் டாக்டர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டில் காலியான உதவி பல் டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் கடந்த ஜூன் 24 – ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேர் செப்டம்பர் 6 – ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களில் இறுதியாக 16 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் பணியிடம் தொடர்பாக அக்டோபர் 14 – ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. கவுன்சலிங் மூலம் டாக்டர்களுக்கான பணியிடமும் உறுதி செய்யப்பட்டது.
திடீர் ஒத்திவைப்பு:
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 – ம் தேதி பல் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்தது. ஆனால், திடீரென்று பணி நியமன ஆணை வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வான டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமைச்சருக்காக தாமதம்…:
ஆனால், ஒரு சில பல் டாக்டர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந் நிலையில், தேர்வில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பணி நியமன ஆணை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தேர்வான டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தாமதம் ஏற்படுவதால் தங்களால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.