Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Positives’ Category

Local self Governance – Maanagaratchi, Ullaatchi Importance

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

மக்களாட்சியின் ஆணிவேர்

தி. இராசகோபாலன்

மக்களாட்சி என்ற பசுமரத்தின் இலையும் கிளையும் பசுமையாக இருக்க வேண்டுமானால், உள்ளாட்சி என்ற ஆணிவேர் வலுவாக இருக்க வேண்டும். இலைக்கும் கிளைக்கும் வேண்டிய நீரையும் எருவையும் ஆணிவேர் வாங்கித் தருவதைப்போல, சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வேண்டிய பக்குவத்தையும் பயிற்சியையும் உள்ளாட்சியே பெற்றுத் தரும்.

மக்களாட்சி, நான்கு முகங்களைக் கொண்ட ஒரு பிரம்மா எனச் சொல்லலாம்.

1) நேரடிக் குடியாட்சி

2) பிரதிநிதித்துவக் குடியாட்சி

3) முடியாட்சியை ஏற்றுக்கொண்ட குடியாட்சி

4) முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்ட குடியாட்சி என நான்கு வகைப்படும். மக்களாட்சியின் முழுமையான பண்புகள் அனைத்தையும் தாங்கியது, நேரடிக் குடியரசு. ஆனால், அதைக் கனவு கண்ட கிரேக்க நாடுகளிலேயே அது சாத்தியப்படவில்லை. இன்றைக்குச் சுவிட்சர்லாந்திலே மட்டும் அக்குடியரசின் பண்புகளைத் தாங்கிய அரசு நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலே தான் மக்களாட்சிப் பண்புகள் அடித்தளத்து மக்களிடம் தொடர்பு கொண்டிருப்பதால் (grassroot level) ராஜீவ் காந்தி போன்ற பிரதமர்கள், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

நாட்டு மக்களின் நலனுக்காகத் தொலைநோக்குத் திட்டங்களைக் கருதி, மாநில அரசும் மைய அரசும் கூட நிதி ஒதுக்கீடுகள் செய்கின்றன; ஒப்பந்தங்களைத் திறக்கின்றன. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்கின்ற அமைச்சரகம் வேறு; ஒப்பந்தப்படி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா எனப் பார்க்கின்ற அமைச்சரகம் வேறு. மேலும், நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நிறைவேற்றப்படும் திட்டங்களை, எல்லா மக்களாலும் அளந்தறிய முடியாது. மற்றும் எல்லா முனைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால், எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக்காமல் போகின்றன. “”பொதுத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் ஒரு ரூபாயில், 15 காசுகள்தாம் மக்களைச் சென்றடைகின்றன” என இந்திய நாட்டின் தலைமை அமைச்சரே முன்பு தெரிவித்திருக்கும் கருத்து, மேற்குறித்த செய்தியை வலுப்படுத்துகின்றது.

உள்ளாட்சித் துறையில் அங்கங்கு நிறைவேற்றப்படும் திட்டங்கள், அங்கங்கு இருக்கும் மக்களுடைய பார்வையில் படுவதால், தவறுகள் நடப்பதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. தவறுகள் நேர்ந்தால், அவை மக்களுடைய கவனத்திற்கு வராமல் போகாது. மேலும், நகர்மன்றக் கூட்டங்களின் நடைமுறையில், சட்டமன்ற உறுப்பினருடைய பார்வையும் இருப்பதால், மாநில அரசின் அங்குசமும் தண்டிக்கும் என்ற அச்சமும் தவறு செய்பவர்களை எச்சரித்துக் கொண்டேயிருக்கும். எனவே உள்ளாட்சி அமைப்பில் மக்களாட்சியின் வேர்களும் விழுதுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டே செல்கின்றன எனலாம்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்பது இன்னும் சட்டவடிவு பெறவில்லை. ஆனால், உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடுகள் என்பதை ஏற்கெனவே மாநில அரசு அமல்படுத்தியதோடு, அது நடைமுறையிலும் இருக்கின்றது. புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த மகளிர்குலம், இன்று ஊராட்சிகளிலும் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் தலைவர்களாக அமர்ந்து பரிபாலனம் செய்வது, பெண்மைக்குக் கிடைத்த வெற்றியல்லவா! எதிர்காலத்தில் அவர்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆவதற்கும் மைய அரசில் அமைச்சர் ஆவதற்கும், ஊராட்சியும் நகராட்சியும் பயிற்சிக்களங்களாக அமையுமே!

பெண்களுக்குத் தரப்பட்டு வரும் தற்போதைய உரிமையிலும், இப்பொழுது ஒரு விபரீதம் புகுந்திருக்கிறது. இரண்டு முறை ஆடவர்க்குரியதாக இருந்த பேரூராட்சித் தலைவர் பதவி, மூன்றாவது முறை மகளிர்க்குரியதாக மாற்றப்படுகிறது. அந்நேரத்தில் இரண்டு முறை பதவியைச் சுவைத்த ஆணாதிக்கம், வேறு யாருக்கும் அப்பதவி போய்விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் மனைவியரையோ, மகளையோ அப்பதவிக்குப் போட்டியிடச் செய்கின்றது. சமூகத்தில் வலிமை படைத்தவர்கள் தாங்கள் நிறுத்திய மனைவியை அல்லது மகளை வெற்றி பெறச் செய்யவும் முடிகிறது. இப்படிச் செய்வதால், பெண்களுக்குரிய இடம் பறிக்கப்படுகிறதே தவிர, அங்கீகரிக்கப்படுவதில்லை.

மகாபாரதத்தில் பீஷ்மரை வதம் செய்ய நினைத்த அர்ச்சுனன், சிகண்டியை (பெண்) முன்னாலே நிறுத்தி, பின்னால் தானிருந்து அம்பு போட்டுக் காரியத்தை முடித்ததுபோல், இன்றைக்கு ஆணாதிக்கம் பெண்ணை முன்னிலைப்படுத்திப் பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்துகின்றது. இதனை எதிர்த்து முதல் குரல் கொடுக்க வேண்டிய பெண்களே ஊமையாகவும் ஆமையாகவும் அடங்கிப் போகும்நிலைதான், வலிமை படைத்த மக்களாட்சி முகத்தில் விழுந்த கரும்புள்ளியாகும்.

உள்ளாட்சியமைப்புகள் காலங்காலமாகச் சமூகத்தில் படிந்திருக்கும் சாதியிழிவைத் துடைப்பதற்கும் வழிவகுக்கின்றன. சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தொகுதிகள் இருந்தாலும், அவற்றில் சர்வபலம் பொருந்தியவர்களை அனுசரித்துப் போகிறவர்களுக்கே வாய்ப்புகள் கிட்டுகின்றன. ஆனால் கீரிப்பட்டி, பாப்பாபட்டி போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலான பஞ்சாயத்துகளிலும், நகர்மன்றங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் கோலோச்சி வருவதைப் பார்க்க முடிகிறது.

1950களிலே தென்மாவட்டங்களில், “புறக்கணிக்கப்பட்டவர்கள் பேருந்துகளில் ஏறக்கூடாது’ என்ற கட்டுப்பாடு இருந்தது. மாநில அரசால் அக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை. என்றாலும், அப்போது ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்வாகத் தலைவராக (டிஸ்டிரிக் போர்டு பிரசிடெண்ட்) இருந்த பட்டிவீரன்பட்டி இ.டபிள்யூ. சௌந்தரபாண்டியனார் அச் சாதியிழிவைத் துடைத்தார். தவணை முடிந்து புதுப்பிக்க வரும் (எப்.சி) பேருந்து முதலாளிகளிடம் “இனி ஒடுக்கப்பட்டவரையும் பேருந்தில் ஏற்றுவோம்; மீறினால் தண்டனைக்கு உள்ளாவோம்’ என எழுதி வாங்கிக் கொண்டுதான், புதிய உரிமத்தை (லைசென்ஸ்) வழங்கினார். அதனால் அம் மாவட்டத்தில் சாதியிழிவு அறவே துடைக்கப்பட்டது. அச் சாதனை, அமரர் சௌந்திரபாண்டியனாருக்கு மட்டுமன்றி, உள்ளாட்சிக்கும் பெருமை சேர்த்தது.

என்றாலும், பஞ்சாயத்துத் தலைவர் பதவியும் பேரூராட்சி உறுப்பினர் பதவியும் ஏலம் போடப்படுகின்ற அவல நிலையைக் காண்கின்றோம். மீன் பிடித்தலையும் தோப்பில் காய் பறித்தலையும் ஏலம் விடலாம்; உள்ளாட்சி அமைப்பையுமா ஏலம் விடுவது? கோயில் திருப்பணிக்காக எனக் காரணம் சொல்லப்பட்டாலும், இவர்கள் ஊர்நலனைக் கொச்சைப்படுத்துவதோடு, இறைக்கொள்கையையும் அல்லவா கொச்சைப்படுத்துகிறார்கள்!

உள்ளாட்சித் தேர்தல்களில் பணம் கொடுப்பதையோ, வாங்குவதையோ அரசியல் சட்டம் (இ.பி.கோ. ஒன்பதாவது படலம் எ-ல் 171-ஏ யிலிருந்து ஐ வரையுள்ள விதிகள்) வன்மையாகக் கண்டித்திருக்கிறதே! மேலும், “பணம் கொடுத்து வாங்கினால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுவோம்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் அச்சுறுத்தியிருக்கிறதே! இவற்றையெல்லாம் மதிக்க மறந்த மக்களுக்கு, உள்ளாட்சி ஏன் என்ற கேள்வி எழுவது நியாயந்தானே!

விடுதலைப் போராட்டக் காலத்தில் “”இரகுபதி இராகவ… ஈஸ்வர அல்லா” எனப் பாடிய காந்தியடிகள் தாம் காண விரும்பிய ராஜ்ஜியம் “இராமராஜ்ஜியம்’ என்றார். இதனை முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுவதாக நினைத்த சிலர், “”என்ன தேசப்பிதாவே! அல்லா பெயரை உச்சரித்துவிட்டுக் கடைசியில் இராமராஜ்ஜியம் என்று சொல்லுகிறீர்களே”, எனக் கேட்டபொழுது, மகாத்மா “நான் இராமராஜ்ஜியம் என்று சொல்வது, கிராம ராஜ்ஜியத்தைத்தான்’ என்றார்.

அவ்வாறு தேசப்பிதா காண விரும்பிய கிராம ராஜ்ஜியத்தை ஏலத்திலா எடுப்பது? சங்ககாலத்திலிருந்து தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரியம் என அமைத்துக் காத்த ஊராட்சி – உள்ளாட்சி அமைப்புகளை ஏலத்திலா விடுவது? உள்ளாட்சி அமைப்புகளில், குடியாட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தி வரங்களைப் பெறுவோமாக; சாபங்களை அறுவடை செய்யாதிருப்போமாக!

Posted in Administration, Dinamani, Governance, Government, History, Ills, Local Body, Maanagaratchi, Op-Ed, Positives, self Governance, Ullaatchi | Leave a Comment »