அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி
கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.
ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.
ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.