மூலிகை மூலை: கண் நோய்க்குப் பொன்னாங்கண்ணி
விஜயராஜன்
எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது. நோயைத் தணித்து உடலைத் தேற்றவும் பசியைத் தூண்டவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.
பொன்னாங்காணி என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.
வேறு பெயர்கள்: ககதிராசு, வாதுவர்ணா, சுகப்பிரயாதித்தோசணா, சீதளச் சக்தி, தாரேகசித்தி, கண்ணுக்கு இனியாள், கடுப்பகலே, நிசோத்திரம், விண்ணுக்குள் மூர்த்தி, பொன்னாங்கண்ணி, கொடுப்பை, சீதை, பொன்னி.
ஆங்கிலத்தில்: Alternathere sessilis (க); R.Br; ex DC; Amrantaceae.
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:
பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.
பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.
பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
பொன்னாங்காணி சமூலத்தை அதிகாலையில் கைப்பிடியளவு மாதக் கணக்கில் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி, கண் குளிர்ச்சி அடையும்.
பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.
இலையின் சாறு ஒரு லிட்டர், எலுமிச்சை பழச்சாறு 1/2 லிட்டர், பசு நெய் 1 கிலோ, ஆவின்பால் 1 லிட்டர் இவற்றை ஒன்றாகக் கலந்து 50 கிராம் அதிமதுரத்தைப் பால்விட்டு அரைத்துப் போட்டு பதமாக சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி அத்துடன் சாதிக்காய் 5 கிராம் சாதிபத்திரி 5 கிராம், சீனா கற்கண்டு 5 கிராம் கோரோசணை 5 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தி அதில் 5 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டுவர மூலச்சூடு வெப்ப நோய், கைகால் எரிச்சல், வாய் நாற்றம், வெள்ளை, வயிற்றெரிச்சல் நீங்கும்.
பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.