பூக்கடை, புரசைவாக்கம், பாண்டி பஜார் நடைபாதை கடைகளை பொங்கலுக்குள் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு வற்புறுத்தல்
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் முக் கிய இடங்களில் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.
இந்த குழு நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.அதில் பூக்கடை பகுதி என்.எல்.சி. போஸ் ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், பார்க் டவுன் ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி அல்லிகுளம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை போல புரசைவாக்கம் பகுதி கடைகளையும் அகற்றி அல்லிகுளத்திற்கு கொண்டு வர வேண்டும். பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளை அந்த பகுதியில் 4 மாடி கட்டி டம் ஒன்று கட்டி அங்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.
இந்த அறிக்கை அடிப்படை யில் இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்த அறிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அறிக்கையின் அடிப்படையில் பொங்கலுக்குள் கடைகளை அகற்ற வேண்டும். மாற்று இடங்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இது தொடர்பான முழு தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று கூறினார்கள்.