வருமான வரி சோதனை மூலம் மக்கள் அனுதாபத்தை பெற “திடீர் அரசியல்வாதிகள்’ முயற்சி: ஜெ. கடும் தாக்கு
சென்னை, ஜன. 29: வருமான வரி சோதனை மூலம், மக்களின் அனுதாபத்தைப் பெற “திடீர் அரசியல்வாதிகள்’ முயற்சிக்கிறார்கள்.
வருமான வரி சோதனையை எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடுவது, கொடும்பாவியை எரிப்பது போன்ற செயல்கள் தவறான முன் உதாரணம் ஆகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சிலரது வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, அதிகாரிகளின் காரை தேமுதிக தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்தனர். வருமான வரி சோதனைக்கு எதிராக விஜயகாந்தும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் பெயரைக் குறிப்பிடாமல் “திடீர் அரசியல்வாதிகள்’ எனக் குறிப்பிட்டு ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சில புதிய திடீர் அரசியல்வாதிகள் தலைவராவதற்கு முயற்சி செய்து பார்த்தார்கள்.
அண்மையில், சில பேர் வீடுகளிலும், அலுவலகங்களிலும், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள்.
அதற்கு ஊரைக் கூட்டி குய்யோ, முறையோ என ஓலமிட்டு, கொடும்பாவிகளை எரித்து, வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கித் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டார்கள்.
நானே என் பிரச்சினைகளை சட்ட ரீதியாகவும், நீதிமன்றம் மூலமும் எதிர்கொண்டு சமாளித்து வருகிறேன். மாநில அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சோதனை, வருமான வரித்துறை சோதனை, சிபிஐ மற்றும் சிபிசிஐடி என்று எத்தனை விதமான சோதனைகள் இருக்கிறதோ அத்தனை சோதனைகளும் எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் நடந்திருக்கின்றன.
நானோ, என்னைச் சார்ந்தவர்களோ இதற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. யாருடையை “”கொடும்பாவியையும்” எரிக்கவும் இல்லை. யாரையும் தாக்கவும் இல்லை.
தொடர்ந்து வந்த பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் சமாளித்து, இதுவரை என்மீது போடப்பட்ட வழக்குகளில் 12 வழக்குகளில் நான் நிரபராதி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறேன்.
அரசியல்ரீதியாக பழிவாங்குவதற்கு வருமான வரித் துறையை பயன்படுத்துவது என்பது புதிதல்ல. மத்தியில் பாஜக ஆட்சியின் போதும், 2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போதும் என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பழைய ஆறு நிதியாண்டுகளுக்கான வழக்குகள் மீண்டும் மீண்டும் தொடுக்கப்பட்டன.
1996-ல் மத்தியில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதேபோல், பல ஆண்டுகளாக ஏராளமான பிரச்சினைகளை இன்று வரை சந்தித்து வருகிறேன்.
திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலம் முதல் ஏறக்குறைய 43 ஆண்டு காலம் வருமான வரி மற்றும் சொத்து வரியைச் செலுத்தி வருகிறேன்.
பல கோடி ரூபாய் வருமான வரியாகச் செலுத்தி வரும் என் மீதே அரசியல் உள்நோக்கத்துடன் பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே வரி ஏய்ப்பு வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள்.
அரசியலில் “வானம்’ யார் என்பதையும், வெறும் “கைக்குட்டைகள்’ யார் என்பதையும் புதிய “திடீர் அரசியல்வாதிகள்’ தெரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.