Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Polichaloor’ Category

‘Coimbatore Technology Park & SEZ will affect Agricultural lands’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம்: ஜெ. எச்சரிக்கை

சென்னை, ஜன. 12: விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தினால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம் காட்டியதும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில் இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.

இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்கப் போவதாக கருணாநிதி கூறுவது யதேச்சதிகாரமானது.

பயன்பாட்டில் உள்ள இந்த விவசாய நிலங்களையும் தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று அப் பகுதி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடச் சென்றால் அவர் மக்கள் முன் வர மறுக்கிறார். ஆத்திரம் கொண்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மைனாரிட்டி திமுக ஆட்சி வந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அபாயகரமானது. தொழில்நுட்பப் பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி எப்போதும் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களைப் பிற காரணங்களுக்காகக் கையகப்படுத்தும் திட்டத்தை எந்த நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

============================================

வர்த்தக நோக்கங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 12: சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொங்கன் ரயில்வேயில் ரோஹா-மங்களூர் இடையே அகல ரயில்பாதைகளை அமைப்பதற்காக 11 ஆயிரத்து 875 சதுர மீட்டர் நிலம் கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.4 வழங்குவது என மாநில அரசு நிர்ணயித்தது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சதுர மீட்டருக்கு ரூ.192 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இத் தொகையை ரூ.38 என குறைத்தது.

இதற்கு எதிராக, நிலத்தின் உரிமையாளர் நெல்சன் ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த ஏ.ஆர்.லட்சுமணன், அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு: உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொகையைக் குறைக்கும்போது பொத்தாம்பொதுவாக முடிவுசெய்துள்ளதாக கருதுகிறோம். சட்டப்படி இது ஏற்கக்கூடியது அல்ல.

முறையீடு செய்தவர்களுக்கு, நிவாரணம், அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருக்கும் மரங்களுக்காக ரூ.59,192 அளிக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.250 வீதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், வர்த்தக நோக்கங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயரிய அளவில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான காரணத்துடன், அப்போதைய மார்க்கெட் மதிப்பு, நிலம் அமைந்துள்ள இடம், நிலத்தின் உரிமையாளர் அடையும் இழப்பு உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

======================================================

கையகப்படுத்திய நிலம் அரசின் சொத்து ஆகும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மார்ச்.19-

ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசின் தனிப்பட்ட சொத்து ஆகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1978-ம் ஆண்டு சென்னையை அடுத்த பாடியில் 43 பேரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 21 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அடுக்குமாடி திட்டம் வரவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 43 பேரும் தமிழக அரசிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் இந்த மனுக்களை நிராகரித்து விட்டது.

உடனே 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் கருத்தை கேட்காமல், பொது நோக்கத்துடன் கையகப்படுத்திய நிலங்களை மனுதாரர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த 2 அப்பீல் மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எங்கள் கருத்தை சொல்ல சென்னை ஐகோர்ட்டு வாய்ப்பு தரவில்லை. குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு நேற்று விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகளின் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அந்த நிலத்தை மார்க்கெட் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் அரசு வழங்கலாம்.

இவ்வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்யும் முன், அதற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். இதுதவிர மறு ஆய்வு மூலம் தன்னுடைய தவறை சரி செய்து கொள்ள டிவிஷன் பெஞ்சுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மிகவும் அவசியமானது. அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று வீட்டு வசதி வாரியம் கூறியதை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டது. இதன்மூலம் இந்த வழக்கின் விசாரணையில் ஐகோர்ட்டு தவறு செய்து உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

———————————————————————————————–

தேவை புதிய விமானநிலையம்

Dinamani op-ed

July 14, 2007

விமானக் கட்டணக் குறைப்பு, அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்கள், பெருகி வரும் விமானப் போக்குவரத்து என்று ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா சமீபகாலங்களில் காண நேரிட்டு வருகிறது. சாதாரண மனிதர்கள்கூட விமானத்தில் பறக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

ஒரு கோடியே இருபத்தெட்டு லட்சம் பயணிகள் மட்டுமே 2003-ல் விமானப்பயணம் மேற்கொண்ட நிலைமை மாறி, சுமார் இரண்டரைக் கோடி பேர் விமானப் பயணம் செய்யும் நிலைமை 2006-ல் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 20 சதவிகிதம் அதிகரிப்பு. மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்று விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும்போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்களில் விமானங்களுக்கு இடவசதி செய்து தரவும், கூடுதலான பயணிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விமான நிலையங்களின் வசதிகளைப் பெருக்கவும் அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் அதிகரிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப விமானநிலைய விரிவாக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

சிறு சிறு நகரங்களில்கூட விமானநிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பூணே, கோவா போன்ற சிறு நகரங்களில் விமானநிலையம் அமைப்பதைப் பற்றி அந்தந்த மாநில அரசுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ராணுவ விமானநிலையங்களின் மூலமாக விமான சேவை நடைபெறுகிறது என்றாலும், பொதுமக்களின் தேவைக்காகப் புதிய விமானநிலையம் தேவை என்று கோரிக்கைகள் எழுகின்றன.

இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India) இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. பெருகிவரும் தேவைக்கு எப்படி ஈடுகொடுப்பது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமானநிலைய ஆணையமும் மூளையைக் கசக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசின் திட்டம் செயல்படுமேயானால், இந்திய விமானநிலைய ஆணையமும் தனியார் விமானநிலையங்களுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமானநிலையங்களை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் 36,000 கோடி ரூபாய் செலவிட இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கையில், தமிழகத்தைப் பொருத்தவரை, விமான நிலையங்கள் அமைக்க இன்னமும் இடங்கள் கையகப்படுத்தியாகவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், அதேநேரத்தில் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமையாமல் விமானநிலையத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் ஏற்பட வேண்டும் என்று புரியவில்லை.

நாம் முந்திக் கொள்ளாவிட்டால், விமானநிலைய வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவப்படுவது மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள விமானநிலையங்களைப் புதுப்பித்து அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்தை எதிர்நோக்கும் அளவுக்கு நவீனப்படுத்தியாக வேண்டும்.

பொதுமக்களும், அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத விமானநிலைய விரிவாக்கப்பணி அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி – எல்லா கட்சியினரையும் அழைத்துப் பேசி, விரைவிலேயே புதிய விமானநிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குவதுதான்!

——————————————————————————————————————————–

விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: மணப்பாக்கம், தரப்பாக்கம் மக்கள் நிலை என்ன?

சென்னை, ஜூலை 22: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கி உள்ளனர்.

இந்த கிராமங்களில புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கான இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது குறித்து அரசு தெளிவாக அறிவிக்காதது இந்த பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 1069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2005 ஏப்ரலில் அறிவித்தபடி மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இங்கு புதிய விமான ஓடுதளம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழப்பம்:

நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அரசு நிர்வாகம், இவர்களுக்கான மாற்று இடம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

2005 ஏப்ரலில் அறிவித்ததுக்கு மாறாக 2005 டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையை காரணமாகக் காட்டி மணப்பாக்கம், தரப்பாக்கத்தில் பெருமளவு நில விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு கிடைத்த குறைந்த நேரத்தை பயன்படுத்தி இங்கு விமான நிலையம் வராது என்று கூறி புதிய குடியிருப்புகளை 2 பெரிய நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

இவ்வாறு இங்கு விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தும் குடியிருப்புகளை விற்பனை செய்தவர்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி அளித்தது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நிவாரணம் எப்போது?

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1991-ல் கவுல்பஜார் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இவர்களுக்கான இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு கிடைக்குமா என்பதே இந்த மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

———————————————————————————————————————–
சென்னை விமான நிலைய விரிவாக்க பணி: ஜனவரியில் தொடக்கம்

சென்னை, செப். 3:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று இந்திய விமானத் துறை செயலர் கே.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்தார்.

ரூ. 2,700 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு தொடங்கும். விமான ஓடுபாதை (ரன்வே) மற்றும் டாக்ஸி வே மற்றும் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் ஆகியன புதிதாக கட்டப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் பெருகி வரும் விமானப் பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களைக் கையாளும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டப் பணிகள் 2010-ம் ஆண்டு முடிவடையும். புதிதாக அமையும் விமான ஓடுபாதை ரூ. 1,700 கோடியில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டடங்கள் ரூ. 1,000 கோடியில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலையம் (கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட்) அமைப்பது குறித்த அனைத்து பூர்வாங்க பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விவரம் ஒரு மாதத்திற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் புதிய விமான நிலையம் அமையும் என்றார் ஸ்ரீவாத்ஸவா.

Posted in acquisition, ADMK, Agriculture, AIADMK, Airport, Asset, Coimbatore, Commerce, Compensation, DMK, encroachment, Farmer, Farming, J Jayalalitha, Kongu Nadu, Kovai, Land, Loss, M Karunanidhi, Mangalore, Market, Pammal, PMK, Polichaloor, Polichalur, Pozhichaloor, Pozhichalur, Prices, Property, Protest, Railways, Refugee, Satellite City, SEZ, Technology Park | 2 Comments »

Tamil nadu Government moves in a Clandestine manner against High Court Orders

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டம் தயார்?

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அமைச்சரவையும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இத்திட்டத்துக்கு தேவையான 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதற்கான நிலத்தை கையகப்படுத்த முதலில் உருவாக்கிய திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு மாற்றியது.

இதன்படி பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தேவையான நிலத்தை தமிழக அரசு அளித்தால் தான் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விமான நிலைய விரிவாக்கத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காண பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி, இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளை விரைந்து கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இது தொடர்பான விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப்பணிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இத்தகைய செயலால் பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

==========================================================================
பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 19: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் ஏரியில் 23 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் அளித்த 3-வது நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ளது தாங்கல் ஏரி. சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

அனகாபுத்தூர் வழியாக 200 அடி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் அளித்தவர்களை இந்த தாங்கல் ஏரியின் ஒரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் குடியமர்த்தியது.

இந்நிலையில், இந்த புதிய குடியேற்றத்துக்கு அருகில் உள்ள 23 ஏக்கர் நிலத்தை இப்பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக இருந்த அரசியல் பிரமுகர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கல் ஏரியில் உள்ள நிலத்தை ஒரு சென்ட் ரூ.50 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டது என்றும், இவ்வாறு விற்பனை செய்த நிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வீட்டுவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன என பொழிச்சலூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதன்படி இங்கு நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகள், கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான ஆளும் கட்சி பிரமுகர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

——————————————————————————-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு: சென்னை விமான நிலையம் விரிவாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடன் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பாமக தலைவர் ஜி.கே.மணி.

சென்னை, மே 23: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,069 ஏக்கரில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 1,069 ஏக்கரில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யும் பணிகளால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று கூறி அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக தவிர, மற்ற கட்சியினர் விரிவாக்கப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 1,069.99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதிப்புக்குள்ளாகும் குடிசைகள், மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் மொத்தம் 947. இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மறுவாழ்வுக்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். விரிவாக்கப் பணியின் முதல் கட்டமாக இத்தகைய மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் விரிவாக்கப் பணிகளை இந்திய வானூர்திக் குழுமம் (ஏஏஐ) ஏற்று நடத்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும். இதற்கென 4,820.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். புதிய விமான நிலையம் அமைக்கும் பணியையும் இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடியிலும் அடுத்தகட்டமாக ரூ. 1,000 கோடியிலும் மொத்தம் ரூ. 2,000 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநிதி.

விரிவாக்கப் பணி மற்றும் புதிய விமானம் அமைக்கும் பணியை இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழக அரசு இதுவரை, தனியார் மூலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ஏஏஐ மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

  • நிதியமைச்சர் அன்பழகன் (திமுக),
  • டி.சுதர்சனம்,
  • டி. யசோதா (காங்.),
  • டி. ஜெயக்குமார் (அதிமுக),
  • ஜி.கே. மணி,
  • இரா. மலையப்பசாமி (பாமக),
  • சி. கோவிந்தசாமி,
  • டி. நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூ.),
  • வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்),
  • வீர. இளவரசன் (மதிமுக),
  • பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
  • வி. பார்த்தசாரதி (தேமுதிக),
  • கலிலூர் ரஹ்மான் (டிஎன்ஐயுஎல்),
  • செல்வம்,
  • கே. பாலகிருஷ்ணன் (டிபிஐ),
  • பூவை ஜெகன்மூர்த்தி,
  • சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோர் பங்கேற்றனர்.

———————————————————————————————————————————

பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

சென்னை பொழிச்சலூர் தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள ஞானமணி நகர்.

சென்னை, ஜூலை 2: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தாங்கல் பகுதியில் புறம்போக்கு நிலத்தை இப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானமணி உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 200-க்கும் அதிகமானோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் இங்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாம்பரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் திமுக பிரமுகரும் பொழிச்சலூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஞானமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது சொந்த ஜாமீனில் ஞானமணி விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் ஞானமணி நகர், விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துணையுடன் அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக ஞானமணி மீது இப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் தொடர்பான அவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறையினர் எடுத்து சென்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந் நிலையில் வருவாய்த் துறை நடவடிக்கையை எதிர்த்து ஞானமணி தரப்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு வருவாய்த் துறை சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தாம்பரம் வட்டாட்சியர் சுப்பையா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னரே தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மணப்பாக்கம் கிராமத்தினர் போர்க்கொடி – எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியரிடம் மனு

சென்னை, ஜூலை 12: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, எம்.எல்.ஏ. யசோதா துணையுடன், மணப்பாக்கம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மொத்தம் 1070 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், மணப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாக்கம் மார்பிள் ரிவர்வியு விரிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் புதன்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஆட்சியர் பிரதீப் யாதவை சந்தித்தனர்.

“எங்கள் பகுதியில் 250 வீடுகள் உள்ளன. நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது. நாங்கள் அப்பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறி மனு அளித்தனர்.

இதற்கு ஆட்சியர் யாதவ் பதில் கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிலத்தை இழப்போருக்கு உரிய இழப்பீடு தரப்படும்’ என்றார்.

பொதுமக்களுடன் வந்த யசோதா எம்.எல்.ஏ. கூறியது:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 1500 வீடுகள் தான் பாதிக்கப்படும் என முதலில் கூறினர். தற்போது 300 வீடுகள் தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.

சிலர் பாதிப்படையும் போது, அவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும். எனது தொகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என்றார் யசோதா.

——————————————————————————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கத்துக்கு கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டம்: தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புதிய நுழைவாயில்

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு போரூரை அடுத்த கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்காக முதலில் 1,457 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் வடக்கில் உள்ள பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலம் கையகப்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4,820 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்படி, விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முதலில் அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் விரிவாக்கத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கும் தற்போதைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் நடுவில் ஆறு (அடையாறு) குறுக்கிடுவதால் திட்ட செயலாக்கத்தில் நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மணப்பாக்கம் முதல் கோவூர் வரையுள்ள பகுதியில் 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய அரசாணை அக்டோபர் 9-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மணப்பாக்கத்தில் 87.85 ஏக்கரும், கெருகம்பாக்கத்தில் 144.57 ஏக்கரும், கொளப்பாக்கத்தில் 145.69 ஏக்கரும், தரப்பாக்கத்தில் 32.56 ஏக்கரும், கோவூரில் 22.51 ஏக்கரும் என மொத்தம் 1,069 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் மணப்பாக்கம் முதல் தரப்பாக்கம் வரையுள்ள நிலங்களில் 3-வது ஓடுபாதையும், தரப்பாக்கம், கோவூரின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலத்தில் புதிய முனைய கட்டடங்களும் அமைய உள்ளன.

மேலும், புதிய முனையங்களை பயன்படுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு? விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி விமான நிலையத்தின் 2 பெரிய ஓடுபாதைக்கு நடுவே அடையாறு செல்லும்.

இதனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலை என்ன?

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு அரசாணை (ஜி.ஓ. எம்எஸ். 108) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இருப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், போரூர், நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டால் இவர்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என இப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு இந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கை.
——————————————————————————————————————————————————-

விமான நிலைய விரிவாக்கத்தால் 381 வீடுகள் இடிக்கப்படும்

சென்னை,நவ. 7: சென்னைக்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விமான நிலையம் அருகேயுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் 1069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. புதிய திட்டத்தால் 381 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் பட்டா நிலத்தில் வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் அரசு கூறியிருப்பதாவது:

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையம் 1151 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுபாதைகள் இரண்டு உள்ளன. சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. எனவே, விமான நிலையத்தை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக விமானங்கள், வானிலேயே வட்டமடித்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாகிறது. எனவே விமான நிலையம் அருகே 583 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், பல்லாவரம் கன்டோன்மெண்ட், பம்மல் போன்ற இடங்களில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் 5050 வீடுகளை இடிக்க வேண்டியிருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு பதிலாக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்த 2-5-2007 ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தால் 381 வீடுகள் மட்டுமே பாதிக்கப்படும்.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். 2005-ம் ஆண்டில் அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப இப்பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொது நோக்கத்துக்காக இப்போது இந்த இடத்தில் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1069 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இந்திய விமான நிலையம் ஆணையம் 1-8-2007 ல் அனுமதி அளித்துள்ளது. இது தவிர திருவள்ளூர் தாலுகா ஸ்ரீபெரும்புதூரில் நவீன விமான நிலையம் அமைக்க 4,820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.குலசேகரன் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

——————————————————————————————————————————————————-

Posted in AAI, abuse, ADMK, Agitation, AIADMK, Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Bribes, Chennai, Collector, Compensation, Corruption, Destruction, Dhaangal, Dharapakkam, Dharappakkam, DMK, DPI, encroachment, Expansion, Extension Project, Gaul Bazaar, High Court, Homeless, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjeepuram, Kanjeevaram, Karunanidhi, Kerugampakkam, Kerukampakkam, kickbacks, Kolapakkam, Kolappakkam, Lake, Law, Madras, Manapakkam, Manappaakkam, Manappakkam, Manmohan Singh, MK, Njaanamani, Njaanamani Nagar, Njamani Nagar, Njanamani, Njanamani Nagar, Order, Pallavaram, PMK, Polichaloor, Polichalur, Power, Pozhichaloor, Pradeep Yadav, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Tamil Nadu, Thaangal, Thaankal, Tharapakkam, Tharappakkam, TN | 1 Comment »