விண்வெளியில் புதிய வாய்ப்பு
பிற நாடுகளுக்கென செயற்கைக் கோள்களைத் தயாரித்து அளிப்பதும் மற்றும் பிற நாடுகள் உருவாக்கும் செயற்கைக் கோள்களை உயரே செலுத்தித் தருவதும் உலகில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தருகின்ற தொழிலாகும். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே இத் திறனைப் பெற்றுள்ளன. இந்தியா இப்போது இத்தாலி நாட்டின் செயற்கைக் கோளைக் கட்டண அடிப்படையில் அதாவது வர்த்தக அடிப்படையில் உயரே செலுத்தியுள்ளதன் மூலம் இப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது இந்திய விண்வெளி அமைப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டானது 352 கிலோ எடை கொண்ட இத்தாலிய செயற்கைக் கோளையும் அத்துடன் 185 கிலோ எடை கொண்ட இந்தியாவின் தொழில்நுட்ப செயற்கைக் கோளையும் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. பிற நாடுகளின் செயற்கைக் கோள்கள் இந்திய மண்ணிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல. கடந்தகாலத்தில் பல நாடுகளின் செயற்கைக் கோள்கள் இவ்விதம் இந்திய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்குக் கட்டணம் வாங்கிக் கொண்டு செலுத்தப்பட்டவை. இப்போதுதான் முதல் தடவையாக முழு அளவிலான கட்டண அடிப்படையில் வெளிநாட்டின் (இத்தாலியின்) செயற்கைக் கோள் இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ராக்கெட் நம்பகமானது என்று உலக நாடுகள் இடையே ஏற்பட்டு வருகிற கருத்தை எடுத்துக்காட்டுவதாகச் சொல்லலாம்.
இந்தியா 1980-களில் விண்வெளி யுகத்தில் அடியெடுத்து வைத்து ராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் உருவாக்க முற்பட்டபோது வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியாத இந்தியா இதில் எல்லாம் எதற்கு ஈடுபட வேண்டும் என்று கேட்டவர்கள் உண்டு. இதற்கு ஆகும் செலவு வீண் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் கடந்த பல ஆண்டுகளில் இந்தியா விண்வெளித் துறையில் மெச்சத்தக்க அளவுக்கு முன்னேறி வானிலை, தகவல் தொடர்பு, நிலவள ஆய்வு என பல வகையான செயற்கைக் கோள்களை உருவாக்கி அவற்றை சொந்த ராக்கெட்டுகள் மூலம் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது.
சில நூறு கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்கள் முதல் 3 டன், 4 டன் என அதிக எடை கொண்ட பெரிய செயற்கைக் கோள்கள் வரை உலகில் ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக் கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. செயற்கைக் கோளின் எடைக்கு ஏற்ப ராக்கெட்டின் திறன் அந்த அளவுக்கு அதிக அளவில் இருக்க வேண்டும். உலகில் இப்போது எடைமிக்க செயற்கைக் கோள்களைச் செலுத்தித் தருவதில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா போன்றவை முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ரஷிய – அமெரிக்க கூட்டு நிறுவனமும் இப்போது இதில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் எடைமிக்க செயற்கைக் கோள்கள் இப்போதும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் – பை ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்படுகின்றன. இவ்விதமான ஒரு செயற்கைக் கோளைச் செலுத்தித் தருவதற்கு வாங்கப்படும் கட்டணம் ரூ. 750 கோடி அளவுக்கு உள்ளது. அதேநேரத்தில் பல நாடுகள் சிறிய செயற்கைக் கோள்களைத் தயாரித்து அவற்றைச் செலுத்தித் தர பிற நாடுகளை அணுகுகின்றன. மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டால் இவ்வித சிறிய செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட் மூலம் செலுத்துவதானால் ஆகின்ற செலவு குறைவுதான். ஆகவே பல நாடுகளும் இனி இந்தியாபக்கம் திரும்பலாம். வருகிற ஆண்டுகளில் இந்திய விண்வெளி அமைப்பானது இந்தவகையில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐஆர்எஸ் நிலவள ஆய்வு செயற்கைக் கோள்கள் வானிலிருந்து எடுக்கிற படங்களை இந்திய விண்வெளி அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே உலக மார்க்கெட்டில் விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.