`போக்கிரி’ பட விழாவில் பேச்சு
“என்னை டாக்டர் விஜய் என்று அழைக்க வேண்டாம்”
ரசிகர்களிடம், விஜய் வேண்டுகோள்
சென்னை, ஆக.29-
“என்னை டாக்டர் விஜய் என்று அழைக்க வேண்டாம்” என்று `போக்கிரி’ பட விழாவில், ரசிகர்களிடம் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார்.
`போக்கிரி’ பட விழா
விஜய் நடித்த `போக்கிரி’ படத்தின் 126-வது நாள் வெற்றி விழா, சென்னை அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் விஜய் கலந்துகொண்டார்.
வாணவேடிக்கையுடன் பட்டாசுகள் வெடித்து விஜய்யை, ரசிகர்கள் வரவேற்றனர். ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அவர் பேசியதாவது:-
“நீங்கள் எல்லோரும் என்னை இளையதளபதி விஜய் என்று மட்டும் அழைத்தால் போதும். டாக்டர் விஜய் என்று அழைத்தால் பயமாக இருக்கிறது. வேறு யாரையோ கூப்பிடுகிற மாதிரி இருக்கிறது.
இந்த படம், `ஷிப்ட்டிங்’கில் 125 நாட்களை தாண்டி ஓடியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. தியேட்டரில் வேலை செய்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு விஜய் பேசினார்.
பாட்டு பாடினார்
அவர் பேசி முடித்ததும், “ரசிகர்களுக்காக, விஜய் ஒரு பாட்டு பாடுவார்” என்று மக்கள் தொடர்பாளர் செல்வகுமார் மேடையில் அறிவித்தார். உடனே விஜய் எழுந்து வந்து, “ஆடுங்கடா என்னை சுத்தி…அய்யனாரு வெட்டுக்கத்தி” என்ற பாடலை பாடினார்.
அதைக்கேட்டு, ரசிகர்கள் கைதட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தார்கள்.
ராம.நாராயணன்
விழாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, “விஜய், எம்.ஜி.ஆர். விட்டுசென்ற இடத்தை மிக விரைவில் பிடிப்பார்” என்றார்.
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது, “சில நடிகர்களுக்கு பெயரும், புகழும் வந்ததும், அவர்களின் நடை-உடை-பாவனைகள் மாறும். ஆனால் விஜய் இன்னும் எளிமையாகவே காணப்படுகிறார்” என்றார்.
அண்ணாநகர் சரக காவல்துறை உதவி ஆணையாளர் ராமதாஸ், `போக்கிரி’ படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தியேட்டர் அதிபர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் விஜய்யை வாழ்த்தி பேசினார்கள்.
வினியோகஸ்தர் கலைப்பூங்கா ராவணன், பிரபு ராம்பிரசாத் ஆகிய இருவரும் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.