Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Poison’ Category

Mooligai Corner: Herbs & Naturotherapy – How to overcome poison with Brahmathandu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

மூலிகை மூலை: விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!

விஜயராஜன்

பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும். இதன் வேர்கள் ஒரு அடி வரை செல்லக் கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிற பூச்சு தென்படும். கோடைக் காலத்தில் வெயில் கொடுமையால் சருகாகக் காய்ந்து அழிந்துவிடும். இலை, பால், வேர், விதை மருத்துவக் குணம் உடையது. நோயை முறித்து உடலைத் தேற்றவும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தமிழகம் முழுதும் தரிசு நிலங்களிலும், ஆற்றங் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியுபுசுப்பி, பிரம்மதண்டி, வனமாலி, வாராகுகா, சுவாறகு, முகிக்கதசத்தை, ரசதூடு, பசயந்தனி, சாதலிங்கத்தை குருவாக்கி, கிறுமி அரி.

ஆங்கிலத்தில்: Argemone mexicana, Linn; Papaveraceae

மருத்துவ குணங்கள்:

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு சமூலச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டி வரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

20 பூக்களை எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் சமூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் சமூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும். அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம். இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.

பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் ஒரு புளிய இலை களத்துக்குப் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக செய்து வர கட்டி தானாக உருண்டு பழுத்து உடைந்து விடும்.

பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.

Posted in Brahma thandu, Brahmathandu, Bramma thandu, Brammathandu, Cobra, Herbs, Mooligai, Naturotherapy, Piramathandu, Piramma thandu, Pirammathandu, Poison, Prama thandu, Pramathandu, Pramma thandu, Prammathandu, Scorpion | 4 Comments »

Carbon emissions are confused with Carbon dioxide – Environment, Backgrounders

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

உலகை மிரட்டும் வாயு!

என்.ராமதுரை

அண்மையில் அறிவியல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் (வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ என்பது நினைவில்லை) கரியமிலவாயு ஒரு “”நச்சுப்புகை” என்று வருணிக்கப்பட்டது. இது ஒரு நச்சு வாயுவே அல்ல. அது நம்மைச் சுற்றிலும் இருப்பது. நமது மூச்சுக் காற்றுடன் வெளியே வருவது. நாம் சாதாரணமாக அருந்தும் சோடா போன்ற பானங்களில் அடங்கியுள்ளது. (பீர் பானத்திலும் உள்ளது) செடி கொடிகள் மரங்கள் கரியமில வாயுவை பகல் நேரங்களில் கிரகித்து தமது உணவைத் தயாரித்துக்கொள்கின்றன.

கரியமிலவாயுவுக்கு ஒரு “தம்பி’ உண்டு. அதுதான் மோசமான வில்லன். அதன் பெயர் கார்பன் மோனாக்சைட். அண்மையில் சென்னையில் காரை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே ஏ.சி. போட்டுக்கொண்டதன் விளைவாக காருக்குள் இருந்தவர்கள் உயிரிழந்த இரு சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டிலும் உயிரைப் பறித்தது கார்பன் மோனாக்சைட் ஆகும்.

ஆனால் கரியமிலவாயு அப்படி உயிரைப் பறிக்கின்ற வாயுவே அல்ல. அதற்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது. அது கண்ணுக்கே தெரியாதது. பலரும் கரியமிலவாயுவையும் புகையையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.

கரியமிலவாயு, மீத்தேன் வாயு, ஆவி வடிவிலான நீர் ஆகியவை காற்றுமண்டலத்தில் எப்போதும் வெவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கின்றன. இவைதான் பூமியில் உயிரினத்தைக் காத்து வருவதாகவும் கூறலாம். பூமியில் அனைத்தும் கடும் குளிரால் உறைந்து விடாமல் இவைதான் தடுக்கின்றன. அதாவது பகல்நேரத்தில் சூரியனிலிருந்து பெறுகின்ற வெப்பத்தை, பூமி பின்னர் முற்றிலுமாக இழந்துவிடாதபடி காப்பது இந்த வாயுக்களே.

ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவுகின்ற இடங்களில் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களே இருக்கும். அதுமட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர்கள், கூரை ஆகிய அனைத்தும் கண்ணாடியால் ஆன கட்டுமானங்களும் காணப்படும். இவற்றுக்குள் செடிகொடிகளை வளர்ப்பர். பகல் நேரங்களில், செடிகளுக்கு கண்ணாடிகள் வழியே சூரிய ஒளிக்கதிர் கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் வெளியே உள்ள குளிர், செடிகளைப் பாதிக்காதபடி கண்ணாடிப் பலகைகள் தடுத்துவிடும். இதன் மூலம் கண்ணாடி கூடாரத்துக்குள் செடிகளுக்கு இதமான வெப்பம் தொடர்ந்து இருக்கும். அதாவது பகலில் சூரிய ஒளிக்கதிர் மூலம் கிடைத்த வெப்பம், வெளியே போய்விடாதபடி கண்ணாடி தடுக்கிறது. இவ்வித கண்ணாடிக் கட்டடத்துக்கு பசுமைக்குடில் என்று பெயர். இக் கட்டடத்தில் ஏற்படுகின்ற விளைவுக்கு பசுமைக் குடில் விளைவு என்று பெயர்.

பூமியைப் போர்த்தியுள்ள காற்று மண்டலத்தில் அடங்கிய கரியமிலவாயு, மீத்தேன், ஆவி வடிவிலான நீர் போன்றவை கிட்டத்தட்ட கண்ணாடி போல செயல்பட்டு பூமி, தான் பெறுகின்ற வெப்பத்தை இழந்துவிடாதபடி தடுக்கின்றன. ஆகவே இந்த வாயுக்களுக்குப் பசுமைக் குடில் வாயுக்கள் என்று பொதுவான பெயர் உண்டு.

காற்றுமண்டலத்தில் சேரும் கரியமிலவாயு அளவு அதிகரித்துக்கொண்டே போனால் பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகுமே என்று கேட்கலாம். ஆனால் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் அந்த வாயு காற்றுமண்டலத்திலிருந்து தொடர்ந்து அகற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள செடி, கொடி, மரம் அனைத்தும் பகல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கின்றன. கடலில் மிதந்தபடி வாழும் பிளாங்கட்டான் என்ற நுண்ணுயிரிகளும் இதைச் செய்கின்றன. காற்று இயக்கம் காரணமாகவும் கடலில் கரியமிலவாயு கரைகிறது. இதை கார்பன் சுழற்சி என்று சொல்வர். கடந்த பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருவதிலும் அகற்றப்படுவதிலும் ஒருவித சமநிலை காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து -மனிதனின் செயல்களால் காற்றுமண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நிலக்கரியைப் பயன்படுத்துகிற அனல் மின்நிலையங்கள், எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் எண்ணற்ற வாகனங்கள் போன்றவற்றின் மூலம் கரியமிலவாயு பேரளவில் காற்று மண்டலத்தில் சேர்ந்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை உயரலாயிற்று. இப்படி சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே போனால் உலகில் விபரீதங்கள் ஏற்படும். தென், வட துருவங்களில் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்களும் இமயமலை போன்ற உயர்ந்த மலைகள் மீதுள்ள உறைந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பிக்கும். கடலில் நீர் மட்டம் உயரும். உலகில் பல இடங்களில் கடல் ஓரமாக அமைந்த நகரங்கள் கடலில் மூழ்க ஆரம்பிக்கும். பருவநிலை மாறும். புயல்கள் அதிகரிக்கும். கோதுமை விளைந்த இடங்களில் நெல் சாகுபடி செய்கிற நிலைமை ஏற்படும். சில பகுதிகள் பாலைவனமாகிவிடும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கையால் இயல்பாக ஜீரணிக்க முடியாத அளவில் கரியமிலவாயு சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கரியமிலவாயு சேர்மான அதிகரிப்பு குறிப்பாக 1950-களிலிருந்து நன்கு காணப்படுகிறது. இப் பிரச்னை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்து அவ்வப்போது உலக அளவிலான மாநாடுகளை நடத்தி விவாதித்தன. கடைசியாக ஜப்பானில் கியோட்டோ என்னுமிடத்தில் 1997-ல் ஐ.நா. சார்பில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

கரியமிலவாயு உள்பட பசுமைக் குடில் வாயுக்கள் காற்றுமண்டலத்தில் மேலும் மேலும் சேருவதைக் கட்டுப்படுத்தி 1990 வாக்கில் இருந்த நிலையை எட்ட வேண்டும் என்பது மாநாட்டின் முக்கிய முடிவாகும். இதுவரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலில் இதை ஏற்பதாகக் கூறிய அமெரிக்கா, பின்னர் 2001-ல் பல்டி அடித்தது. இந்த உடன்பாட்டை ஏற்பதனால் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வயல்களிலிருந்தும் அத்துடன் கால்நடைகளின் வயிற்றிலிருந்தும் நிறைய மீத்தேன் வாயு காற்றில் கலப்பதாக குதர்க்கம் பேச முற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டுதோறும் காற்றுமண்டலத்தில் கூடுதலாகச் சேரும் கரியமிலவாயுவில் 21 சதவிகிதம் அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்படுவதாகும்.

எனினும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் தழுவிய அளவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்).

Posted in AC, beer, Carbon, Carbon di oxide, Carbon dioxide, CO, CO2, Colorless, emissions, Environment, Gas, Methane, O3, Odorless, Oxygen, Ozone, Poison, Pollution, Protection, Radiation, Soda, Vapor, Water | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Poison Killer

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

மூலிகை மூலை: கக்குவான் இருமல் குணமாக…

எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.

வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.

ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae

மருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.

நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)

நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.

நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

கற்பூரவள்ளி

இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

வேறுபெயர்கள்: ஓம்வள்ளி

மருத்துவ குணங்கள் : கற்பூரவள்ளி இலையை அடையாகச் செய்து சாப்பிட்டு வர செரிமாணக் கோளாறுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி இலையை மென்று தின்று வர மூச்சுத் திணறல் போகும். (நாக்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டு லேசான வெளிர் காரம் இருக்கும். இதனால் எந்தத் தீமையும் இல்லை.)

கற்பூரவள்ளி இலை, முசுமுசுக்கை, தூதுவளை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து நல்லெண்ணெய் அல்லது பசும் நெய்விட்டு வதக்கி பின்னர் அரைத்து வைத்துக்கொண்டு அமுக்கிரா, சுக்கு, மிளகு, சேர்த்து சமஅளவாக எடுத்துப் பொடிச்செய்து, ஒரு கடாயில் மாவுப் பொடிக்குத் தகுந்தவாறு நெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் பொடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டே வரும்போது விழுதையும் சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டையும் கலந்து கிளறிக்கொண்டு இறக்கி வைத்து நெல்லிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டுவர இழுப்பு சளி, இருமல் குணமாகும்.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Cough, Herbs, Karpooravalli, Karppuravalli, Karupuravalli, Medicine, Mooligai, Naturotherapy, Poison, Toxin, Venom, Yunani | Leave a Comment »

Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning

Posted by Snapjudge மேல் மே 18, 2007

நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!

ராமன் ராஜா

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.

கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.

மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.

கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)

டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.

கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.


கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்

கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்

இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.

அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Air, Auto, bhopal, Breath, Calcutta, cancer, Carbon, Carbon Monoxide, Coal, emissions, Environment, Factory, Fuel, Fumes, Gas, Global Warming, Health, Healthcare, Kolkata, Lignite, Lung, Mine, mines, Oxygen, Ozone, Petrol, Poison, poisoning, Pollution, Poor, Ramanraja, Tamil, toxic, Tunnel, UCC, vehicle, Warming, Worker | 1 Comment »

Don’t drink Carbonated or Vitamin Water – How to survive hot sunny weather

Posted by Snapjudge மேல் மே 1, 2007

ஆரோக்கியம்: கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!

ந.ஜீவா

”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா? இதைக் குடிக்க மாட்டோமா?’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடை

மழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.

கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது? என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.

டாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.

நல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்

குடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.

அடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.

வெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.

மினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.

அடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா? என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

தண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.

அமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.

அமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு

அதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

உடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.

வெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”

Posted in Aerated, Air, Carbonated, Cloud, Cool drinks, CoolD, Drink, Environment, Fertilizer, Gloabl Warming, Hot, Mineral, Natural, Nitrates, organic, Oxygen, Phosphates, Poison, Pollution, Pure, Rain, River, Scarcity, Source, Sun, Water, Weather | Leave a Comment »

PCB insists it was a heart attack, but rumours give murder spin to Woolmer case

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

கிங்ஸ்டன், மார்ச். 19-

உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

===============================================

தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது

கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.

“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.

பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.

ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.

Posted in Assassination, Casino, Coach, Cricket, Cronje, diabetes, Gambling, Games, ICC, insulin, Inzamam, Inzi, Ireland, Loss, Manager, Match fixing, medical, Murder, Pakistan, Poison, SA, South Africa, Stroke, Suicide, Trainer, WC2007, Woolmer, World Cup | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Thumbai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

மூலிகை மூலை: நஞ்சுக்கு எதிரி தும்பை!

விஜயராஜன்

எதிர் அடுக்குகளில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையுடையது. இது இரண்டு அடிக்குமேல் வளராத சிறுசெடி இனமாகும். இதன் வேர்கள் மூன்று அங்குலத்துக்கு மேல் வளராத குத்துச் செடிக்கு எப்படி வேர் இருக்குமோ அதைப் போன்றுதான் இருக்கும். நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளை உடையது. இந்தத் தண்டுப் பகுதியின் அடியில் இருந்து வளர வளரக் குறுகலான பட்டை போன்று செல்லக்கூடியது. இந்தத் தண்டின் நுனியில் வட்ட வடிவில் காய் போன்ற முடிச்சு இருக்கும். அந்த முடிச்சில் பல அரும்புகள் தேன்கூடு போல அடுக்கி வைத்தாற்போல் இருக்கும். அந்த முடிச்சின் அரும்பில் இருந்து பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்மையான நிறத்தை உடைய சிறு மலர்கள் பூத்திருக்கும். அதே அரும்பில் 4 இலைகள் எதிர்த்து எதிர்த்து விரிந்திருக்கும். இலைகள் அடியும் நுனியும் மெலிந்தது போன்று நடுப்பகுதி சற்று அகலத்துடன் காணப்படும். இலை, பூ மருத்துவக் குணம் உடையது. இலை கோழையை அகற்றவும், உடல் வலிமையைப் பெருக்கவும் கூடியது. வாந்தி உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. பூ முறைநோய் அகற்றும் குணம் கொண்டது. தமிழ்நாடெங்கும் மாரி காலத்தில் ஈரமுள்ள இடங்களில் தானாகவே வளரக்கூடியது.

வேறு பெயர்கள்: பொருகல், பழபாகல், வைகுண்டம், அதோமுகி, கடற்கொடி, சத்திரம்.

வகைகள்: பெருந்தும்பை, கவித்தும்பை, பேய்த்தும்பை, பித்தாருசம், சன்னிநாயகம்.

ஆங்கிலத்தில்: Leucas aspera, Spreng, Lamiaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச்சாறு 1 மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பையிலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.

தும்பையிலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சமஅளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி 3 மணிநேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர நமது உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.

நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பையிலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு 2 சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும்.

உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு கொடுக்க பேதி நீங்கும். மேலும் விஷம் தீண்டியவர்களை 24 மணி நேரத்திற்குத் தூங்க விடக் கூடாது. எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும். தாழ்வாக இருக்கக் கூடாது.

தும்பையிலை, உத்தாமணியிலை சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகின்ற மாதவிலக்கு சரியாகும்.

தும்பையிலைச் சாறு நாகதாழியிலைச் சாறு வகைக்கு 50 மில்லி அளவு எடுத்து கலந்து குடிக்க கருந்தேள், செந்தேள் ஆகியவற்றின் கொடிய விஷம் இறங்கும். கடித்த இடத்தில் சிவனார் வேம்பு இலையைக் கசக்கி அழுத்தித் தேய்க்க விஷம் தானாக இறங்கும்.

தும்பைப் பூ 50 கிராம் எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.

தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர எப்படிப்பட்ட நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.

Posted in Allopathy, Alternate, Antidote, Body, cure, Doctor, Health, Herbs, Homeopathy, Lamiaceae, Leucas aspera, Medicine, Mooligai Corner, Naturotherapy, Poison, Spreng, Thumbai, Thumpai, Unani, Yunaani, Yunani | Leave a Comment »

Coke, Pepsi Cola drinks & Pure Dasani Water – Theiyvanayagam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

தமிழரும் அயல்நாட்டு சுவைநீரும்

செ.நெ. தெய்வநாயகம்

தொன்றுதொட்டு தமிழகத்தில் நீரின் வகைகள் உணரப்பட்டு ஆற்றுநீர், ஊற்றுநீர், சுனைநீர், மழைநீர், அருவிநீர், கிணற்றுநீர் எனப் பலவகையாகப் பாகுபடுத்தப்பட்டு பயன்பட்டு வந்துள்ளன. மருந்துகளில் பனிநீரையும் அமுரிநீர் என்ற சிறப்பு நீரையும் பயன்படுத்தி வந்துள்ளனர். பழச்சாறுகளை நேரடியாகவோ, நீர் கலந்து பருகுவதோ பண்டைய பழக்கம்.

கோடைக்காலங்களில் பானை நீரில் வெட்டி வேர் போன்ற நறுமணப் பொருள்களை இட்டுப் பருகுவது பழக்கம். இவையனைத்தும் குடும்பப் பழக்கங்கள். வணிக முறையில் பருகு நீரைச் சுவைப்படுத்துவது அயல்நாட்டுப் பழக்கம்.

இயற்கைச் சுனைநீரில் நீர்க் குமிழ்கள் இருப்பதைக் கண்டு, குமிழ்களில் உள்ளது கரிவளி என்ற கரிஅமிலவளி (Carbon dioxide) என்பதைக் கண்டுபிடித்து, செயற்கையாக அதை உருவாக்க முயன்று, சோடியம் பைகார்போனேட்டு என்ற உப்பைக் கொண்டு அவர்கள் நீரில் அந்தக் கரிவளியைக் கலந்து விற்றார்கள். செயற்கைச் சுனைநீர் என்பது அதன் பெயர். ஆங்கிலத்தில் நர்க்ஹ ரஹற்ங்ழ் என்ற சொற்தொடர் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு 1798.

1881-இல் கோலா கொட்டையின் பொருள்களைப் பயன்படுத்திய சுவைநீர் வெளியிடப்பட்டது. Cola acuminata என்ற ஆப்பிரிக்க பசுமரத்தின் கொட்டைகள் பயன்பட்டன. இவைகள் காபின் இஹச்ச்ங்ண்ய்ங் என்ற கிளர்ச்சிப்பொருள் உடையவை. நம் நாட்டு காப்பிக் கொட்டைகளிலும் இதே பொருள்தான் கிளர்ச்சியைக் கொடுக்கிறது!

1886-இல் ஜார்ஜியா மாநிலத் தலைநகரான அட்லான்டா நகரில் டாக்டர் யோவான் பெம்பெருட்டன் தான் கோகோயினப் பொருளையும், கோலா கொட்டைப் பொருளையும் சேர்த்து கோகா – கோலா உருவாக்கினார். இதையடுத்து 1898-இல் பெப்சி கோலா உருவானது.

மைய மற்றும் தென் அமெரிக்கச் செடியாகிய கோகா செடி (Erythroxylum Coca)-யின் இலைகளில்தான் கோகேயின் (Cocaine) என்ற வலு வாய்ந்த வேதிப்பொருள் கிடைக்கின்றது. அமெரிக்கப் பழங்குடி மக்கள் இதை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். கோகேயின் ஒரு கிளர்ச்சியூட்டியாகவும், தடவப்பட்ட இடங்களில் மரத்துப்போகச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது. அநேக நாடுகள் இதை ஒரு போதைப் பொருள் எனத் தடை செய்துள்ளன.

உலகெங்கும் பரவலாக விற்கப்படும் கோகா கோலா, பெப்சி கோலா சுவைநீர்களில் சேரும் பொருள்கள் சிலவற்றை ஆய்வோம்.

1. பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid்) மூலம் சுவைநீரில் அழுத்தத்துடன் கலக்கப்பட்ட கரிவளி வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. பாஸ்பாரிக் அமிலத்தின் கொடையாகிய பாசுபேட் குருதியில் கூடுவதால் அதற்குச் சமமாக கால்சியம் சத்து (Calcium), எலும்புகளிலும், பற்களிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பாஸ்பாரிக் அமிலம் இறுதியாக சிறுநீரில் வெளியாகும்போது, கூடவே பயனுள்ள கால்சியமும் வெளியேற்றப்படுவதால் எலும்புகளும், பற்களும் வலு குறைகின்றன.

2. சுவைநீர்கள் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்தினால் குழாய்நீரில் உள்ள குளோரின், டிரை ஆலோ மீதேன்கள் (TRIHALOMETHANES), காரீயம் (Lead), காட்மியம் (Cadmium) மற்றும் பல வேதுப் பொருள் மாசுக்கள் கலந்துவிடும்.

ஒரு புட்டி கோலா சுவைநீரில் 10 தேக்கரண்டி சர்க்கரையும், 150 கிலோ கலோரி எரிசக்தியும், 30-55 மி.கி. காபீனும் சேர்ந்துள்ளன. அமெரிக்க சோளத்திலிருந்து (Maize) பழ இனிமத்தை (Fructose) பெற்றுக் கலக்குகிறார்கள். கோலாக்கள் சர்க்கரைப்பாகு போல் இனிக்க இவ்வாறு கூடுதலாகக் கலக்குகிறார்கள். இந்தச் சுவைநீரைச் சாப்பிட்டால் 1. நாவில் இனிப்புச் சுவை மிகும். 2. பசி அடங்கும். இதையே 3-4 புட்டிகள் என நாள்தோறும் குடிப்பவர்கள் தங்கள் அன்றாட உணவில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நுண்ணூட்டச் சத்துகளான வைட்டமின்கள் சேர்ப்பது எங்ஙனம்?

உடல் இனிப்பு கூடக்கூட இன்சுலின் சுரப்புக் கூடுகிறது. அதிக இன்சுலின் சேர்வதால் 1. உயர் ரத்த அழுத்தம். 2. உயர் ரத்தக் கொழுப்பு (Cholesterol) 3. இதய நோய்கள். 4. நீரிழிவு. 5. உடற்பருமன் – வந்து சேரும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே சாக்கரின் (SACCHARIN) மற்றும் சைக்கிளாமேட் (CYCLAMATE) என்ற செயற்கை இனிப்புகள் புற்று ஈனிகள் (இஹழ்ஸ்ரீண்ய்ர்ஞ்ங்ய்ள்) எனத் தெரிந்து அதைத் தடை செய்தார்கள். கோலாக்காரர்களின் பணப்பசி தணிந்தது உண்டா? இல்லவே இல்லை. Diet SODA வேறுபட்ட குடிநீர் என்றும் நீரிழிவு, பருமன் உடையோர் குடிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்தச் சுவைநீரில் தற்போது அஸ்பார்டேம் (ASPARTAME) சேர்க்கிறார்கள். இந்த அஸ்பார்டேம் என்ன செய்யும்?

மூளைப்புற்று, பிறவி ஊனம், நீரிழிவு, உணர்வுக் கோளாறுகள், கைகால் வலிப்பு என்ற நோய்களை உருவாக்க வல்லது இந்த அஸ்பார்டேம்! அஸ்பார்டேம் கலந்த சுவைநீரை வெகுநாள்களாகச் சேமித்து வைத்தாலோ, சூடான இடத்தில் வைத்தாலோ, அப்பொருள் மாறி மீதைல் ஆல்ககால் என்ற மெதனாலாக (Methanol) மாறும். இந்த மெதனால் பார்மால் டிஐடு ஆகவும், பார்மிக் அமிலமாகவும் மாற வல்லது. இவை இரண்டும் புற்றீனிகள் ஆகும்!

கலப்படமற்ற நல்ல குடிநீரின் – அமிலத்தன்மை ல்ஏ.7 அதாவது நடுநிலை காரமும் இல்லை. அமிலமும் இல்லை. கோலா சுவைநீரின் அமிலத்தன்மை ல்ஏ 2-4 வரை உள்ளது. இந்தக் கோலாவை மலக்கழிவுத் தொட்டியில் ஊற்றினால் கரப்பான் பூச்சிகளும், தெளிப்பான் மருந்தாக அடித்தால் பயிர் பூச்சிகளும் மடிவது இதனால்தான். உடைந்த பல் ஒன்றை ஒரு குவளை கோலாவில் போட்டு வையுங்கள். 7 நாள்களில் உடைந்த பல் கரைந்துவிடும். இந்த அமிலத்தையும் குடிக்கத்தான் வேண்டுமா? சித்தர் பாடல் மாறத்தான் வேண்டுமா? “”கல்லைத்தான், மண்ணைத்தான், கோலாவைத்தான் குடிக்கத்தான், கற்பித்தானா”? இல்லவே இல்லை.

அதிகமான இனிப்பு – பற்களுக்குக் கேடு, சிதைவுநோய்கள் பெருகும். கோலாவில் கலக்கப்படும் நிறமிகள் செயற்கையானவை. மேற்கோளாக மஞ்சள் எண்.5 (Yellow No.5) சேர்க்கிறார்கள். இதன் மூலம் இளைப்பு நோய் (Asthma), தோல் தடிப்பு (hives) மற்றும் ஒவ்வாமை நோய்கள் உருவாகலாம்.

இந்தக் கோலாக்களில் கோலகலமான விற்பனைக்கு உதவுவது என்ன தெரியுமா? விளம்பரங்கள்! பத்திரிகை விளம்பரமாக ஆண்டொன்றுக்கு 70 கோடி அமெரிக்கா டாலர்கள் செலவு. நேரடி விற்பனை, ஊக்கப்பரிசு, விளையாட்டுப் போட்டிகள், கடைக்காரர்களின் முகமை வீதம், விளம்பரப் பலகைகள் என இதைவிடி அதிகச் செலவுகள் செய்கிறார்கள்.

இந்தியாவுக்கு 1977-இல் வந்தார்கள். அப்போதைய அரசு விரட்டியது. மீண்டும் வந்தார்கள். கோக கோலாவிற்காக மட்டுமே இந்தியாவில் 52 தொழிற்சாலைகள் உள்ளன. அவை உறிஞ்சும் நமது தாயகத்தின் நிலத்தடி நீரோ நாளொன்றுக்கு எட்டு முதல் 15 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீர் போனால் அடுத்த வறட்சிக் காலத்தில் நமக்கு எந்நீர் கிடைக்கும்?

இந்தியாவில் செய்யப்படும் கோலாக்கள் தூய்மையானவையா? இல்லை என்பதுதான் மெய்நிலை! நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை மெய்ப்பித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கோலா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது! இதை ஏன் நாடு முழுமையாக விரிவுபடுத்தவில்லை? நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி நாட்டுக்கு ஒரு விதி என்று இருக்கலாமா?

தில்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment்) செய்த ஆய்வுகளின் முடிவுகள், விரிவாக அவர்களின் பத்திரிகையான ஈர்ஜ்ய் ற்ர் உஹழ்ற்ட் – 2006 ஆகஸ்டு 15ஆம் நாள் இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 57 புட்டி கோலாக்கள் அனைத்திலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

நச்சுநீர் வேண்டாம் நமக்கு

நம்முடைய பாரம்பரிய இளநீர், மோர், சுவைப்பால், சாறுகள், பதநீர் போன்றவை தாராளமாகக் கிடைக்கும்போது இந்தக் கோலா உபத்திரவத்தை விலைக்கு வாங்குவானேன்? மக்கள் விழிப்படையட்டும். நம் நாட்டு மக்கள் இந்தச் சுவைநீர்கள் வேண்டாம் என முடிவெடுக்கட்டும். விரட்டுவோம் நஞ்சினை! புகட்டுவோம் நல்லதொரு பாடம்!

Posted in ASPARTAME, Calcium, Carbon dioxide, Centre for Science and Environment, Cholesterol, Cocaine, Coke, cola, Cola acuminata, Fructose, Health, Pepsi, Phosphoric Acid, Poison, SACCHARIN, Water | Leave a Comment »

Coke did not exceed EU Standards

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 11, 2006

கோக-கோலா பானங்களில் நச்சுப்பொருள் வரம்பளவு மீறப்படவில்லை: கோக் தகவல்

புதுதில்லி, ஆக. 12: ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள தரமுறைகளின்படி பார்த்தால் கோக-கோலா பானங்களில் நச்சுப் பொருள்களின் வரம்பளவு மீறப்படவில்லை என கோக் கூறியுள்ளது.

கோக், பெப்சி உள்ளிட்ட 14 வகையான பானங்களில் நச்சுப்பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த பானங்களுக்கு தடை விதித்தன. கேரளத்தில் உற்பத்தி, விற்பனை இரண்டுக்குமே தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கோக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐரோப்பிய ஒன்றிய தரநிர்ணயத்தின் படி, தனியே ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் இந்திய மென் பானங்களில் கண்டறியத்தக்க அளவு நச்சுப் பொருள்கள் இல்லை’ எனக் கூறியுள்ளது.

“பிரிட்டிஷ் அரசின் ஆய்வகமான மத்திய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஸ்எல்) மென்பானங்கள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன’.

“உலகம் முழுவதும் பின்பற்றுவதைப் போலவே இந்தியாவிலும் எங்களது பானங்களில் பாதுகாப்பு, தரம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுவதாக’ கோக் கூறியுள்ளது.

Posted in Ban, Coca cola, Coke, Dinamani, Drink, FDA, India, Pesticide, Poison, Soft Drinks, Tamil | Leave a Comment »

Gujarat Bans selling Coke/Pepsi in Schools & Colleges

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2006

குஜராத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் கோக், பெப்ஸிக்கு தடை

ஆமதாபாத், ஆக. 7: அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு ரசாயன நச்சு கலந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து கோக், பெப்ஸி உள்ளிட்ட குளிர் பானங்களுக்கு அரசாங்க பள்ளி, கல்லூரிகளில் தடைவிதித்துள்ளது குஜராத் அரசு.

மாநிலத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 400 அரசுக் கல்லூரிகளிலும் திங்கள்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று மாநில கல்வி அமைச்சர் ஆனந்தீபன் படேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைப் பொறுத்தவரை அவர்களே இவ்விஷயத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றார்.

குஜராத் பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 260 கல்லூரிகளின் உணவகங்களில் கோக், பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு சனிக்கிழமை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Ban, Coke, Colleges, Dinamani, Gujarat, Pepsi, Pesticide, Poison, Schools, Tamil | Leave a Comment »

Coke, Pepsi Cola Cool drinks Ban – Rajasthan, Punjab, MP & Kerala

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2006

கோக கோலா, பெப்ஸிக்கு கேரளம், ம.பி.யிலும் தடை

திருவனந்தபுரம், ஆக. 7: ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களும் கோக கோலா, பெப்ஸி குளிர் பானங்களுக்கு தடைவிதித்துள்ளது.

கோக கோலா மற்றும் பெப்ஸி குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டு இருப்பதாகவும் அவை உயிருக்கு கேடு விளைவிக்கும் எனவும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் அறிவியல் மையம் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இதையடுத்து ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இந்த இரண்டு குளிர் பானங்களுக்கும் தடை விதித்தன. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்றம், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்த இரண்டு பானங்களுக்கும் தடை விதித்தது.

கேரளத்திலும் தடை விதிப்பதென முதல்வர் அச்சதானந்தன் தலைமையில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Posted in Ban, Coke, Cool drinks, Dinamani, Kerala, Madhya Pradesh, MP, Pepsi, Pesticide, Poison, Punjab, Rajasthan, Tamil | Leave a Comment »