தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 8 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்
தீபாவளிக்கு விஜயகாந்த் சரத்குமார், அஜீத், ஆர்யா படங்கள் ரிலீசாயின. இந்த படங்களுடன் மோதாமல் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டன. அதன்படி இம்மாதம் 8 படங்கள் ரிலீசாகின்றன. வாத்தியார், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்கள் இன்று ரிலீசாயின.
`வாத்தியார்‘ தீபாவளிக்கு வர இருந்தது. சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் வெளிவராமல் நின்றது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம் ஏற்பட்டு ரிலீசாகியுள்ளது.
இந்த படத்தில் அர்ஜ×ன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்துள்ளார். அநியாயங்களை எதிர்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் கதைதான் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை படத்தில் ஸ்ரீகாந்த், பாவனா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்த் பெட்ரோல் பங்க் ஊழியராக நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க விரும்பினர். பாவனா கால்ஷீட் இல்லாததால் எடுக்க முடியவில்லை. ஸ்டான்லி இயக்கியுள்ளார்.
விஷால் நடித்த சிவப்பதிகாரம் படமும் இம்மாதம் ரிலீசாகிறது. ஏற்கனவே விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு படங்கள் தொடர்ச்சியாக வென்றதால் இப்படமும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜோடியாக மம்தா நடித்துள்ளார்.
குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ரெண்டு படம் 17-ந் தேதி ரிலீசாகிறது. மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரீமாசென், அனுஷ்கா என இரு நாயகிகள். சென்னையில் தீவுத்திடலில் `செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரீமாசென் கடல் கன்னியாக நடிக்கிறார்.
பரத் கதாநாயகனாக நடித்த வெயில் படமும் அதே 17-ந் தேதி ரிலீசாகிறது. ஜோடியாக பாவனா நடித்துள்ளார்.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ளார். விருதுநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ஸ்ரேயா ரெட்டி, பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமான கல்யாணி கதாநாயகியாக நடித்த பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை படமும், புதுமுகங்கள் நடித்துள்ள ஆவணி திங்கள் படமும் இம்மாதம் ரிலீசாகிறது.
பாலச்சந்தர் இயக்கியுள்ள `பொய்‘ படமும் இம்மாத ரிலீஸ் படங்கள் பட்டியலில் உள்ளது. இதில் உதய்கிரண், விமலாராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.