மன நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
சென்னை, அக். 4: மனநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அனுமதி இலவசம். ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மனச்சிதைவு நோய் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “ஸ்கார்ஃப்,’ இந்தத் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஆர்.தாரா, சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்தியாவில் 90 லட்சம் பேர் மனச் சிதைவு உள்ளிட்ட மனநலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 37 மட்டுமே உள்ளன.
தமிழகத்தில் ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் இறந்தனர். சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இப் பணியில் ஊடகங்களுக்கு அதிகப் பங்கு இருக்கிறது என்றார் டாக்டர் தாரா. திரைப்பட விழா: மன நோய்களின் பல்வேறு தன்மைகளை மையமாகக் கொண்ட, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சஞ்சய் தத் நடித்து, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “லகே ரஹோ முன்னாபாய்‘ என்ற இந்தித் திரைப்படம் நிறைவு நாளில் திரையிடப்படுகிறது.
திரைப்பட விழாவை ஒட்டி அறிவிக்கப்பட்ட குறும்பட போட்டிக்கு 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 15 பேரின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் படங்கள் நடுவர் குழு முன் திரையிடப்படும். அவற்றில் சிறந்த மூன்று படங்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 பரிசு வழங்கப்படும்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பார்த்திபன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பேசினர். “பொய் முகங்கள்’ என்ற தலைப்பிலான மனநோய் குறித்த விளக்கப் படமும் திரையிடப்பட்டது.