மூலிகை மூலை: பொடுகு நீங்க… பொடுதலை!
விஜயராஜன்
பற்களுடன் ஆன நான்கு, நான்கு இலை அடுக்குகளையும், கதிரான மிகச் சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி இனமாகும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், கோழையை அகற்றவும் உடலிலுள்ள தாதுவை வலுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்:
பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடாரசோதித்தா.
ஆங்கிலத்தில்: Lippianodiflora, Mich, Verbeneceae.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:
பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அத்துடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு கூட்டி நெய்யில் வதக்கி உண்டால் சீதபேதி, வயிற்று இரணம், 3 நாளில் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர ரண குன்மம் குணமாகும்.
பொடுதலை இலையுடன் சீரகம் அதேயளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் அல்லது சங்களவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வெட்டைச் சூடு, வெள்ளை குணமாகும்.
பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து பகல் உணவுடன் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம், இரத்த மூலம், பெüத்திரம் குணமாகும்.
கைப்பிடியளவு பொடுதலை இலையுடன் சிறிது இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக்கிச் சுடு சோற்றில் சிறிது நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர மார்புச் சளி, சுவாசக் காசம் குணமாகும்.
பொடுதலை சமூலச் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இரண்டு முறை தலைமுழுகி வர, தலையில் வருகின்ற தோல் நோய், பொடுகு குணமாகும்.
பொடுதலைக் காயும், மஞ்சளும் சம அளவாக எடுத்து அரைத்து புண்களின் மீது வைத்துக் கட்ட 6 நாளில் குணமாகும்.
பொடுதலையை வதக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க, மாந்தம், இருமல், சூளை, வெள்ளை குணமாகும். பொடுதலையை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி, ஒரு சங்களவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல் நிற்கும்.
பொடுதலை இலையுடன் சீரகம் சிறிது சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழ அளவு காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை குணமாகும். பொடுதலை இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர உள் மூலம் தணியும். இந்த இலையை அரைத்துக் கட்டி, கொப்புளம் மீது பற்றுப் போட்டுவர, பழுத்து உடையும். மேலும் புண், அக்கி புண், நெறிக் கட்டி, வீக்கம் இவைகள் மீது பூசி வர குணமாகும். பொடுதலைக் காயை பழைய அரிசியுடன் சேர்த்து உலையிலிட்டு முதற் கொதி வந்தவுடன் வெறும் அரிசியை உலர்த்தி நெய்யாக்கி, அதை மாந்தமுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பொடுதலை இலை, காய் இவற்றை சாறு பிழிந்து அதனுடன் மிளகு, எண்ணெய் கூட்டி வெயிலில் வைத்துச் சாறு சுண்டி எண்ணெய் மட்டும் தங்கிய பின் அதை தலையில் தேய்த்து தலை முழுகி வர, தலையில் காணும் பொடுகு நீங்கும்.