ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
புது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.
ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.
பயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.
படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
தூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
ரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
சினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.