Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Plasma’ Category

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to purify your Blood

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன? மருந்து கூறவும்.

தலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்டை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

வந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.

நீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, cure, Doc, Doctor, haemoglobin, Health, Healthcare, Hindu, Hinduism, Iron, medical, Medicine, Nutrition, Plasma, Platelets, Rbh, Religion, Swaminathan, Tablet | Leave a Comment »