Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘plantindia’ Category

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »