இது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்!
பி.முரளிதரன்
வாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா? “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.
இவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
புழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…
“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.
15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
வாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது?’ என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.
பின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.
பொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.
அதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.
பருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவுன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.
சமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.
மத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப் பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.
போதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவைகள் கிடைத்தால், இத்தொழிலை மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.
-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக!
படங்கள்: “மீனம்’ மனோ