மூலிகை மூலை: அந்தரத் தாமரை
விஜயராஜன்
அடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.
ஆங்கிலத்தில்: Pistia Steteotes, Linn, Areceae.
மருத்துவக் குணங்கள்:
அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.
அந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.
அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.
அந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.