அணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா?
க. ரகுநாதன்
இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.
பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.
இதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.
ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.
அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.
தன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.
2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.
இத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.
பாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது!.
இந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.
இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.
எப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.
ஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.
இந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.
அணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.