![]() |
![]() |
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம் |
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு
![]() |
![]() |
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம் |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.
அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
![]() |
![]() |
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் |
வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.