நாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் கிராம தொலை மருத்துவ மையங்கள்சென்னை, ஜன. 12: நாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் 16 கிராம தொலை மருத்துவ மையங்களை ஏற்படுத்த தில்லியிலுள்ள சர் கங்காராம் மருத்துவமனை திட்டமிட்டுள்ளதாக அம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.கே. ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
கிராமங்களில் உள்ள சுகாதார மையங்களில் இந்த மையங்கள் செயல்படும். இத்திட்டம் முதற்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி, கிராமப் பகுதியில் சர் கங்காராம் மருத்துவமனையின் தொலை மருத்துவ நிலையம் நிறுவப்படும். இம் மையத்தில் பணிபுரிய கங்காராம் மருத்துவமனையின் சார்பில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
அம் மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவர் குறித்த மருத்துவத் தகவல்கள் தில்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் மூலம் அந்நோயாளியின் இடத்திலிருந்து கொண்டே உலகத் தரத்தில் மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சையைப் பெற முடியும் என்றார் டாக்டர் பி.கே. ராவ்.