Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Photographs’ Category

Sai Krishnan – 7th International Abilympics photography champ

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

நிழற் படங்களல்ல… நிஜப்படங்கள்!

யுகன்

ஒரு கேனன் 5ஈ கேமிரா, ஒரு ஆப்பிள் லேப்-டாப் கம்ப்யூட்டர், ஏராளமான தன்னம்பிக்கையுடன் விமானமேறிய சாய் கிருஷ்ணன் என்னும் இளைஞர் போலியோவால் பாதிக்கப்பட்டவர், சமீபத்தில் ஜப்பானின் ஷிஷோகா நகரத்தில் நடந்த ஏழாவது சர்வதேச அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில், புகைப்படப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார். சர்வதேச அளவில் உடல் திறன் குறைந்தவர்களுக்காக நடத்தப்படுவது எபிலிம்பிக்ஸ். இதில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது வரையான சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் சாய் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”எனக்குச் சின்ன வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்தவர் என் தந்தை. அவர்தான் நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு ஒரு ஹாட்-ஷாட் கேமிராவை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இது மிகவும் காஸ்ட்லியான ஹாபியாக இருப்பதால், என்னுடைய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியிலான வேகத்தடை நிச்சயம் இருந்தது. இதையும் தாண்டி நான் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது வித்யாசாகர் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

தேசிய அளவில் நான் உடல் திறன் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு, “ஆம்பிஷன் ஃபோட்டோகிராஃபி அகடமி’யின் நிறுவனரான ராஜா பொன்சிங் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தார். இவரைத் தவிர, ஷரத் அக்ஷர், ராஜீவ் மேனனின் “மைன்ட்ஸ்க்ரீன் ஃபோட்டோகிராஃபி இன்ஸ்டிட்யூட்’டின் முதல்வரான ஞானசேகரன் மற்றும் சுரேஷ், குமாரசுவாமி போன்றவர்களின் வழிநடத்துதலுடன்தான் நான் தேசிய அளவிலான போட்டிகளில் ஜெயித்தேன்.

ஜப்பானில் நடந்த எபிலிம்பிக்கைப் பொறுத்தவரை இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பதால் அதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் பணிபுரியும் ஹெச்.சி.எல். நிறுவனமே கேனன்5டி கேமிராவையும், ஆப்பிள் லேப்-டாப்பையும் வழங்கியது. மத்திய அரசு மற்றும் தேசிய எபிலிம்பிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உதவியுடன்தான் என்னால் ஜப்பானுக்குப் போய் இந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

உலகம் முழுவதுமிருந்தும் பேச்சுத் திறன், செவித் திறன், கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் குறையுள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் 120 நாடுகளிலிருந்து பங்கேற்றனர். புகைப்படப் போட்டியில் 25 நாடுகளிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து புகைப்படப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நானும்,

கோவையைச் சேர்ந்த ஹரி என்பவரும்தான்.

டெய்லரிங், மோட்டார் ஆக்டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங், ஸ்வெட்டர் பின்னுவது, கணிப்பொறியிலேயே வரைவது… என்று பல வகையான போட்டிகளும் நடந்தபடி இருக்கும். இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களையே, அந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு, பிரம்மாண்டத்தோடு எத்தனை படம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இறுதியாக நாம் எடுத்தவற்றிலிருந்து ஐந்து புகைப்படங்களை நாமே தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான “கமெண்ட்’ டையும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகைப்படம் எடுப்பதில் புகழ்பெற்ற நடுவர்களைக் கொண்ட குழு இறுதி முடிவை எடுக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே சப்ஜெக்ட்டிற்குத்தான் படமெடுக்கும்போது முன்னுரிமை கொடுப்பேன். பின்னணிக்கு அல்ல. இந்த அடிப்படையில் “வெளிச்ச துவாரம்’ என்னும் தலைப்பில் நான் எடுத்த உடல் திறன் குன்றியவரின் திறனும், ஸ்வெட்டர் பின்னும் கைகளின் திறனை வெளிப்படுத்தும் புகைப்படமும், “அசெம்பிளிங்’ செய்யும் பெண்ணின் பார்வைக் கூர்மையை விளக்கும் புகைப்படமும் எனக்கு இந்தப் பரிசை வாங்கித் தந்ததாக நம்புகிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த கோணம், நாம் முன்னிலைப்படுத்தியிருக்கும் சப்ஜெக்ட், குறிப்பிட்ட புகைப்படம் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கும் செய்தி… போன்ற விஷயங்களின் அடிப்படையில் 26 போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தனர். நான் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கோவையிலிருந்து வந்திருந்த ஹரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பங்கேற்ற 26 பேரில் 21 பேர் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு முறையாக இந்தச் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரிய நாட்டின் போஸ்க்தான் இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்தமுறை ஆறாவது இடத்திற்குப் போய்விட்டார். தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கம் வென்றார்.

உலக அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம். அரசு சார்பாகவும் சரி, தனியார் சார்பாகவும் சரி எந்த பாராட்டும்,அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட எங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நிழற் படங்களாக அல்ல… நிஜப்படங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று பெரிய திட்டமே இருக்கிறது. பார்க்கலாம்…” என்றார் நெகிழ்ச்சியுடன் சாய் கிருஷ்ணன்.

Posted in 5MP, Abilympics, Achievements, Achievers, Camera, Cannon, Canon, Challenged, Coimbatore, disabilities, disability, Disabled, Faces, Films, handicap, Handicapped, Hari, HCL, Human Resources, IAF, India, International, Kovai, NAAI, Notable, people, Photographer, Photographs, Photos, Pictures, Polio, Saikrishnan, Shizuoka, Skills, Sponsors, Sponsorships, Sponz, Vidyasagar, vocational, World | 1 Comment »