3 அரசு நிறுவன பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.1,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு
புது தில்லி, பிப். 9: தேசிய முதலீட்டு நிதி கணக்கில் (என்.ஐ.எஃப்.) பணம் ஏதும் இல்லாததால் 3 அரசுத்துறை நிறுவனங்களின் மதிப்பீட்டுக்கு ஏற்ப, புதிதாக பங்குகளை வெளியிட்டு ரூ.1,500 கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதை தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
- ஊரக மின்சார கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி.),
- பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்.),
- தேசிய புனல் மின் உற்பத்தி கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பங்குகளை, அவற்றின் இன்றைய மதிப்பீட்டுக்கு ஏற்ப விற்று மொத்தமாக ரூ.2,400 கோடி திரட்ட முடியும் என்று தெரிகிறது.
இதில் ரூ.1,500 கோடியை தேசிய முதலீட்டுக்கு நிதியத்துக்குத் திரட்ட அரசு முடிவு செய்திருக்கிறது.
அரசுத்துறை நிறுவனத்தின் இப்போதைய பங்குகளை விற்பதைப் போல அல்ல இது என்று நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதாவது கைவசம் உள்ள பங்குகளை சந்தை மதிப்பில் விற்பது அல்ல என்றார். ஆனால் இன்னொரு வகையில் இது அரசு நிறுவனப் பங்குகளை விற்பதாகத்தான் அர்த்தம். ஏன் என்றால் இம் மூன்று அரசுத்துறை நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளும் அரசின் வசமே உள்ளன. புதிதாக பங்குகளை வெளியிட்டு அதை விற்பதன் மூலம் இந்த 100 சதவீத உரிமை குறைந்து 81.22%-ஆகவும் 86.36% ஆகவும் மாறிவிடும் என்று தெரிகிறது.
அரசுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது, அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக்கூடாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே சமயம் தேசிய முதலீட்டு நிதியில் பணம் ஏதும் இல்லாமல் இருப்பதும் சரியல்ல என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். இந்த விற்பனைத் தொகை அந்த நிதியத்துக்குத்தான் செல்கிறது என்று விளக்கினார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
பங்குகளை வெளியிடுவதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.