இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்
புது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.
இறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:
சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.
2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.
கடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.
இறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.
கச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.